மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள குவாக்டா டவுனிலும் சுராசந்த்பூர் மாவட்டம் காங்வாய் பகுதியிலும் தானியங்கி ஆயுதங்களை பயன்படுத்தி கும்பல் நேற்று இரவு வன்முறையில் ஈடுபட்டுள்ளது. இன்று காலை வரை, அங்காங்கே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளது.


மக்களை ஒன்று திரட்டி, நாசவேலையில் ஈடுபட வைக்கும் முயற்சிகளும் தீ வைப்பு சம்பவங்களும் மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது. மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், ராணுவம், அசாம் ரைபிள்ஸ், விரைவு அதிரடிப் படை மற்றும் மாநில காவல்துறை ஆகியவற்றின் கூட்டுப் படைகள் இம்பாலின் கிழக்கு மாவட்டத்தில் நள்ளிரவு வரை கொடி அணிவகுப்பு நடத்தினர்.


அட்வான்ஸ் மருத்துவமனைக்கு அருகில் உள்ள அரண்மனை வளாகத்தில் தீ வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை சுமார் 1,000 பேர் கொண்ட கும்பல் ஒன்று கூடி, தீ வைப்பு மற்றும் நாசவேலையை மேற்கொள்ள முயன்றது. கும்பலைக் கலைக்க விரைவு அதிரடிப் படை கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை வீசினர். இதில், அப்பாவி மக்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.


மணிப்பூர் பல்கலைக்கழகம் அருகேயும் நாசவேலையில் ஈடுபட கும்பல் முயற்சித்தது. இரவு 10.40 மணியளவில் தோங்ஜு அருகே 200 முதல் 300 பேர் கூடி, உள்ளூர் எம்.எல்.ஏ.வின் வீட்டை சேதப்படுத்த முயன்றனர். ஆனால், விரைவு அதிரடிப் படை அதிகாரிகள் கூட்டத்தை கலைத்தனர்.


நேற்றிரவு மற்றொரு கும்பல் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள இரிங்பாம் காவல் நிலைய ஆயுதக் கிடங்கை சேதப்படுத்த முயன்றது. இரவு 11.40 மணியளவில் 300 முதல் 400 பேர் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால், விரைவு அதிரடிப் படை அதிகாரிகள்
கூட்டத்தை கலைத்தனர்.


200 முதல் 300 பேர் கொண்ட கும்பல், சின்ஜெமையில் நள்ளிரவுக்குப் பிறகு பாஜக அலுவலகத்தைச் சுற்றி வளைத்தது. துரிதமாக செயல்பட்ட ராணுவக் குழு அந்த கூட்டத்தைக் கலைத்தது. மற்றொரு கும்பல் நள்ளிரவில் மேற்கு இம்பாலில் உள்ள மாநில பாஜக தலைவர் அதிகாரிமாயும் சாரதா தேவியின் இல்லத்தையும் நாசமாக்க முயன்றதுய ஆனால், அதை ராணுவம் மற்றும் விரைவு அதிரடிப் படை தடுத்து நிறுத்தியது.


மணிப்பூரில் தொடரும் வன்முறை சம்பவங்கள் நாட்டையே உலுக்கி வருகிறது. வன்முறை சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், வன்முறை சம்பவங்கள் தொடர்வது பல்வேறு விதமான கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது.


நேற்று, 1,000 க்கும் மேற்பட்ட கும்பலால் மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்  வீட்டுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. சம்பவம் நடந்த போது மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீட்டில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இம்பாலில் ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கும்பல் இம்பாலில் உள்ள அமைச்சரின் வீட்டை தீ வைத்து எரித்துள்ளனர். சம்பவத்தின் போது அமைச்சரின் வீட்டில் ஒன்பது பாதுகாப்புப் படையினர், ஐந்து பாதுகாவலர்கள் மற்றும் எட்டு கூடுதல் காவலர்கள் பணியில் இருந்தனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒருவர் உயிரிழந்தார்.