நேரு காலத்தில் தொடங்கி தற்போது வரை இந்தியா மற்றும் தமிழக அளவில், இலாகா இல்லாமல் அமைச்சரவையில் நீடித்தவர்களின் விவரங்களை அறியலாம்.
இலாகா இல்லாத அமைச்சர்:
ஆளுநரின் எதிர்ப்பையும் மீறி செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என, தமிழ்நாடுஅரசு அரசாணை வெளியிட்டது. இந்த இலாக அமைச்சர் பதவி என்பது நம் நாட்டிற்கு புதியது ஒன்றும் இல்லை. சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த முறை. பின்பற்றப்பட்டு வருகிறது. எந்தவொரு துறைக்கும் தலைமையாக இல்லாவிட்டாலும், அமைச்சர் பதவிக்கான ஊதியம் மற்றும் அமைச்சரவை முடிவுகளில் வாக்களிக்கும் உரிமையை பெறுவது தான் இலாகா இல்லாத அமைச்சர் பதவி என அழைக்கப்படுகிறது.
மத்தியில் இலாகா இல்லாத அமைச்சர்கள்:
- நேரு தலைமையில் சுதந்திர இந்தியாவில் அமைந்த முதல் அமைச்சரவையிலேயே இலாக இல்லாத அமைச்சர் பதவி இடம்பெற்று இருந்தது. அதன்படி, 1947ம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதல் அமைச்சரவையில் ராஜகோபாலாச்சாரி, என். கோபாலசுவாமி அய்யங்கர் மற்றும் வி.கே. கிருஷ்ணன் மேனன் ஆகியோர் இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்தனர்.
- 1952ம் ஆண்டு நேரு இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற போதும் டிடி கிருஷ்ணமாச்சாரி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்தனர்.
- 2003ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற வாஜ்பாய் அமைச்சரவையில், தனக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரித்துறையை ஏற்காத மம்தா பானர்ஜிக்கு இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்தார். அதே அமைச்சரவையில் இருந்த முரசொலி மாறன் 2003ம் ஆண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பல மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தபோது, அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார்
- 2004ம் ஆண்டு பிரதமராக மன்மோகன் சிங் பதவியேற்றபோது, தற்போது தெலங்கானா முதலமைச்சராக உள்ள சந்திரசேகர ராவ் மற்றும் நட்வர் சிங் ஆகியோர் இலாக இல்லாத அமைச்சர்களாக செயல்பட்டனர்.
- இறுதியாக மோடி முதன்முறையாக 2014ம் ஆண்டு பதவியேற்றபோது, பாஜக மூத்த தலைவரான அருண் ஜெட்லியும் இலாக இல்லாத அமைச்சராக இருந்தார்.
தமிழகத்தில் இலாகா இல்லாத அமைச்சர்கள்
இலாகா இல்லாத அமைச்சர் என்ற இந்த முறை, எம்ஜிஆர் காலத்தில் தான் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதோடு, அதிமுக ஆட்சியில் தான் இந்த முறை அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் முதன்முறையாக செந்தில் பாலாஜி தான் இலாகா இல்லாத அமைச்சர் எனும் பொறுப்பை பெற்றுள்ளார்.
- 1984-85ல் தமிழக முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், உடல்நலக்குறைவால் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் நிர்வகித்த துறைகளை அப்போதைய நிதி அமைச்சர் நெடுஞ்செழியனுக்கு வழங்கப்பட்டது.
- . 2011-ம் ஆண்டு கால்நடை அமைச்சராக இருந்த கருப்பசாமிக்கு உடல்நலக்குறைவு காரணமாக இலாகா இல்லாத அமைச்சராக மாற்றப்பட்டார்.
- 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியன் 2015ம் ஆண்டு திடீர் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பதவி உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வசம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.
- 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது துறைகளை நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து ஆளுநர் அறிவித்தார்.