வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர புயல் “பிபர்ஜாய், வடகிழக்கு திசையில் நகர்ந்து 15 ஆம் தேதி இரவு 22:30--23:30 மணி அளவில் மிகத்தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்)-மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடந்தது. 10 நாட்களுக்கு மேலாக அரபிக் கடலில் நிலவியது. பிபர்ஜாய் புயல் கடந்த 6 ஆம் தேதி உருவானது. நேற்றைய முன் தினம் இது அதி தீவிரச் புயலாக கரையை கடந்தது. கரையை கடக்கும் போது சுமார் 145 கிமீ வேகத்தில் காற்று வீசியது.
பிபர்ஜாய் புயல் காரணமாக கட்ச், தேவபூமி, துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், ஜூனாகர், மோர்பி மாவட்டத்தில் மழை கொட்டித் தீர்த்தது. மேலும் கடல் பகுதிகளில் சுமார் 6 முதல் 14 மீட்டர் உயரம் வரை எழுந்ததால் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. ஒரே நாளில் ஒருசில இடங்களில் 20 செ.மீ வரை மழை பதிவானது. கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த புயல் காரணமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை, இருப்பினும் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதால் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
இதற்கு முன் புயல் கரையை கடக்கும் போது பலத்த சேதம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் குஜராத் மாநிலத்தில் இருக்கும் கடலோர பகுதி மக்கள் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோரை வேறு இடத்திற்கு பத்திரமாக மீட்கப்பட்டனர். மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் 500 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன, மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. வெள்ளப்பெருக்கு, மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்ததன் காரணமாக சுமார் 1000 கிராமங்களில் மின்சார சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்புகள் சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், தொடர் மழை காரணமாக பெரும் சவாலாக உள்ளது என்றும் குஜராத் நிவாரண ஆணையர் அலோக் சிங் கூறுயுள்ளார்.
மேலும் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும், புயல் பாதித்த இடத்தில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதி தீவிர புயல் பிபர்ஜாய் தற்போது வலுவிழந்து தெற்கு ராஜஸ்தான் பகுதியை நோக்கி செல்வதாகவும், இதனால ஜலோர் – பார்மர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.