நாம் மனிதர்கள் என்பதற்கு அடையாளமே நம்மில் இருக்கும் மனிதம். இன்னொரு உயிர் ஆபத்தில் இருக்கும்போது, அதை காப்பாற்றும்போதுதான் அந்த மனிதம் வெளிப்படும். அதுபோன்ற மனிதம் மிக்க செயல்கள் அவ்வப்போது நடைபெறுவதும், அவற்றில் சில கேமராக்களின் கண்களில் சிக்குவதையும் நாம் பார்த்திருப்போம்.


தண்டவாளத்தில் சிக்கிய நாய்:


அந்த வகையில் மும்பையில் நடந்த சம்பவம் ஒன்று காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவிலே எப்போதும் பரபரப்பான நகரமாக மும்பை உள்ளது. குறிப்பாக, மும்பை ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கமான ஒன்றாகும். மும்பையில் மக்கள் சேவைக்காக அடிக்கடி ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில், மும்பையில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் தெருநாய் ஒன்று தண்டவாளத்தை கடந்துள்ளது. அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த நாயின் பின்னங்காலில் ஒரு கால் தண்டவாளத்தின் இடுக்கில் சிக்கிக்கொண்டது. இதனால், காலை எடுக்க முடியாத நாய் ஊளையிடத் தொடங்கியது. இதைக்கேட்ட ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.






காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள்:


மேலும், நாய் சிக்கிக்கொண்ட தண்டவாளத்தில் ரயில் ஒன்று ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. இதைக்கண்ட ரயில்வே ஊழியர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். அதேசமயம் சட்டென்று சுதாரித்துக்கொண்டு அவர்கள் நாய் சிக்கியிருந்த இடத்திற்கு ஓடிச்சென்றனர். பின்னர், ஒரு ரயில்வே ஊழியர் தன் கையில் இருந்த கடப்பாறையில் அந்த தண்டவாள இடுக்கின் இடையில் மெல்ல ஒரு இடைவெளியை ஏற்படுத்தினார். இன்னொரு ஊழியர் நாயின் காலை வெளியே எடுத்துவிட்டார்.


தண்டவாளத்தின் பிடியில் இருந்து தப்பிய நாய் பின்னர் ஓடியது. இந்த சம்பவத்தை ரயில்வே பாலத்தின் மேல் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட நாயை ரயில் வருவதை அறிந்ததும் சாமர்த்தியமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


மேலும் படிக்க: Independence Day CM Stalin: சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கான ஓய்வூதியம் ரூ.11,000 ஆக அதிகரிப்பு - முதலமைச்சர் ஸ்டாலினின் சுதந்திர தின உரை


மேலும் படிக்க: Viral Video: இமாச்சல பிரதேசத்தை புரட்டிபோட்ட கனமழை.. இடிந்து விழுந்த கோயில்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ