பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின.


பெண்களுக்கு எதிராக தொடரும் குற்றங்கள்:


சமீபத்தில் கூட, ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமி ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, பெங்களூருவில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய காவல்துறை அதிகாரியே இந்த செயலில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூரு காவல்துறையில் பணியாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ள சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், தனது வாடகைதாரரின் மகளான ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து, இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பெங்களூருவில் அதிர்ச்சி:


பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், இதுகுறித்து கூறுகையில், "நேற்று இரவு 8.30 மணியளவில் கீழ் தளத்தில் விழுந்து கிடந்த தனது பொம்மையை எடுக்க எனது மகள் கீழே சென்றார். வெகுநேரமாகியும் அவள் திரும்பி வராததால், எனக்கு அச்சம் ஏற்பட்டது. பின்னர், எனது மகள் கண்ணீருடன் திரும்பினார். அவளது உதடுகள் வீங்கி இருந்தது. கீழே நடந்ததைச் சொல்லி அழுது கொண்டிருந்தார். அவள் மிகவும் பயந்து போயிருந்தார்" என்றார்.


சம்பவத்தை விவரித்த சிறுமியின் தந்தை, "குற்றம் சாட்டப்பட்டவரிடம் சண்டை போட தரை தளத்திற்குச் சென்றபோது, ​​ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் மகன் என்னை மிரட்டினார். அந்த மகனும் காவல் துறையில் பணிபுரிகிறார். என பல குண்டர்களை தெரியும் என்று கூறி மிரட்டினார்.அவர் என்னை அமைதியாக பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை காலி செய்யும்படி கூறினார்" என்றார்.


பின்னர், சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். அவர்கள் எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்து, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தனர்.


சிறுமி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. சிறுமியின் தந்தையை மிரட்டி, குற்றத்தை மறைக்க முயன்ற, கைது செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்படலாம். வீட்டின் முதல் தளத்தில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் வாடகைக்கு குடியேறியது குறிப்பிடத்தக்கது.