இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பெய்த கனமழையில் சிக்கி 21 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு இன்று தெரிவித்துள்ளார். சிம்லாவின் சம்மர் ஹில் பகுதியில்  நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து ஒரு கோயில் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.


இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை:


மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியிட்டுள்ள இமாச்சலப் பிரதேச முதலமைச்சர், "குறைந்தது 20-25 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது" என்றார். சோலன் நகரில் ஜாடோன் கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பின் காரணமாக ஏழு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவிதத்துள்ளனர்.


கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தால் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு மாட்டு தொழுவமும் அடித்துச் செல்லப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.  சுமார் 55 மணி நேரம் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மண்டி, சிர்மூர், சிம்லா, ஹமிர்பூர், பிலாஸ்பூர் மற்றும் சோலன் ஆகிய இடங்களில் வரலாறு காணாத வெள்ளத்தாலும் நிலச்சரிவு ஏற்பட்டதாலும் மரங்கள் விழுந்ததாலும் பல வீடுகள் சேதமாகின. 12 வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன.


மின்சார வசதியின்றி தவிக்கும் மக்கள்:


பல வீடுகளில் மின்சார வசதியும் தண்ணீர் இல்லாமலும் மக்கள் தவித்து வருகின்றனர் என கூறப்படுகிறது. கல்கா-சிம்லா, சண்டிகர்-மனாலி, சிம்லா-தரம்ஷாலா மற்றும் பௌண்டா-ஷிலை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட சாலைகள் மாநிலம் முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதனால், பேருந்துகள் செல்லும் 2,000க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


அடுத்த 3 அல்லது 4 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பியாஸ், பாங் அணை, ரஞ்சித் சாகர் மற்றும் சட்லஜ் நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேக வெடிப்பு போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கனமழையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இமாச்சலப் பிரதேச முதலமைச்சர், "இந்த கடினமான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளோம்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


ஹர்னம் (38), கமல் கிஷோர் (35), ஹேம்லதா (34), ராகுல் (14), நேஹா (12), கோலு (8) மற்றும் ரக்ஷா (12) ஆகியோர் கனமழையில் சிக்கி உயிரிந்திருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் கௌரவ் சிங் தெரிவித்துள்ளார்.


 






நேற்று மாலை, வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து மாவட்ட ஆணையர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர், அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தொழில் பயிற்சி நிறுவனங்கள், பொறியியல், பாலிடெக்னிக், மருந்தியல் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்தார்.