கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 11 ஆ தேதி முடிவடைந்தது. முன்னதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். அதன்படி இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையை எதிர்கொள்ள தயாராக இருந்தார்.


இதனிடையே பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்தி கூறி வந்த சூழலில் மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி ஒன்று வந்தது. அதாவது வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மல்யுத்த விதிகளின் படி 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்பவர்கள் அந்த எடையை விட கூடுதல் எடையில் இருக்கக் கூடாது.


வினேஷ் போகத்திற்கு அதிர்ச்சி தந்த விளையாட்டு தீர்ப்பாயம்: 


ஆனால், அவர் 100 கிராம் அதிக எடையுடன் இருக்கிறார். இதனால் தான் இந்த தகுதி நீக்கம் என்று ஒலிம்பிக் கமெட்டி அறிவித்தது. அதே நேரம் அமெரிக்கா வீராங்கனை சாராவுக்கு தங்கமும், கியூபா வீராங்கனை லோபஸ் வெள்ளிப் பதக்கமும், சுசாகி வெண்கலமும் வென்றதாக அறிவிக்கப்பட்டது.


இந்த அதிர்ச்சியில் இருந்த வினேஷ் போகத் சர்வதேச மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெருவதாகவும் தன்னால் இன்னும் போராட முடியாது என்றும் கூறினார். இருப்பினும், வினேஷ் போகத் விளையாட்டு தீர்ப்பாயத்தில் தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி மேல்முறையீடு செய்தார்.


இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. வெள்ளி பதக்கம் கோரி வினேஷ் போகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கின் முழு தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை.


வழக்கின் தீர்ப்பு பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய ஒலிம்பிக் சங்கம், "100 கிராம் என்ற சிறிய வேறுபாடு மற்றும் அதன் விளைவாக ஏற்படும் விளைவுகள், வினேஷின் தொழில் வாழ்க்கையின் அடிப்படையில் மட்டுமல்ல, தெளிவற்ற விதிகள் மற்றும் அவற்றின் விளக்கம் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன.


போட்டியின் இரண்டாவது நாளில் அத்தகைய எடை மீறலுக்காக ஒரு விளையாட்டு வீரரை மொத்தமாக தகுதி நீக்கம் செய்வதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். விளையாட்டு வீரர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் சமமான, நியாயமான தரநிலைகளின் அவசியத்தை இது அப்பட்டமாக நினைவூட்டுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.