ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் கோக்கர்நாக் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் பயங்கரவாதிகளை விரட்டும் நடவடிக்கையில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை குறிவைத்து துல்லியமாக ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அனந்த்நாக்கில் 50 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வரும் துப்பாகிச் சூடு தாக்குதலில் ஒரு கர்னல், மேஜர், டிஎஸ்பி மற்றும் ஒரு இராணுவ வீரர்கள் உட்பட நான்கு பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த அதிகாரிகளில் சண்டிகரில் வசிக்கும் கர்னல் மன்பிரீத் சிங், பானிபட்டைச் சேர்ந்த மேஜர் ஆஷிஷ் தோஞ்சக், டிஎஸ்பி ஹுமாயுன் பட் ஆகியோர் அடங்குவர்.
இதில், கர்னல் மன்பிரீத் சிங், 19 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப்பிரிவு தளபதியாக பொறுப்பு வகித்து வந்தார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் 19 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப்பிரிவு தளபதி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கர்னல் மன்பிரீத் சிங்கின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான பஞ்சாப் மாநிலத்தில் நடந்தது. மொஹாலி மாவட்டம் முள்ளன்பூர் கிராமத்தில் நடந்த இறுதி ஊர்வலத்தில் பெருவாரியான கிராம மக்கள் கலந்து கொண்டு கர்னல் மன்பிரீத் சிங்குக்கு அஞ்சலி செலுத்தினர்.
கர்னல் மன்பிரீத் சிங்குடன் வீர மரணம் அடைந்த மேஜர் ஆஷிஷ் தோஞ்சகின் உடலும் அவரது சொந்த ஊரான ஹரியானா மாநிலத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. பானிபட்டில் நடந்த இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுடன் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் சேர்ந்து மேஜர் ஆஷிஷுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில், பயங்கரவாதிகளின் மறைவிடத்தை குறிவைத்து அவர்களை அங்கிருந்து வெளியே கொண்டு வர ராணுவம் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. கோகர்நாக் பகுதியில் 2 அல்லது 3 பயங்கரவாதிகள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. பயங்கரவாதிகள் ராணுவத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்துவதால், ராணுவம் இந்த பணியை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்திருக்கும் பயங்கரவாதிகள் பற்றிய குறிப்பிட்ட தகவல் கிடைத்ததை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். புதன்கிழமை அதிகாலை பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு தாக்குதல் தொடங்கியது. கோகர்நாக் அடர்ந்த காடுகளில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை விரட்டும் நடவடிக்கையை ராணுவமும் காவல்துறையும் இணைந்து கையாண்டு வருகின்றன. வியாழக்கிழமை முதல் காணாமல்போன ஒரு ராணுவ வீரர், கோகர்நாக் காட்டில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்துள்ளது. பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்து சுதந்திரம் என்றால் என்ன? நீதிமன்றத்தில் வகுப்பெடுத்த இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்
வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்.. இறுதி ஊர்வலத்தில் ராணுவ சீருடையில் சல்யூட் அடித்த 6 வயது மகன்