மணிப்பூரில் நடந்த இனக்கலவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இணையத்தில் பரப்பப்பட்ட பொய்யான தகவல்களே இனக்கலவரம் மோசமாவதற்கு காரணம் என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், மணிப்பூரின் உண்மையான கள நிலவரத்தை பற்றி அறிந்து கொள்வதற்காக எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (EGI) மணிப்பூர் சென்றது.
பகீர் கிளப்பிய எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியாவின் அறிக்கை:
மணிப்பூரில் ஆய்வு மேற்கொண்ட எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றிருந்தன. மணிப்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டதால் செய்திகளை சேகரிப்பதில் பிரச்னை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக குறிப்பிட்ட ஊடகங்கள் ஒரு சார்பாக செய்திகளை வெளியிட்டதாகவும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தெரிவித்தது.
இனக்கலவரத்தின்போது மாநில அரசு ஒரு சார்பாக நடந்து கொண்டதற்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா குற்றஞ்சாட்டியது. இதை தொடர்ந்து, மணிப்பூரில் மோதலை தூண்ட முயற்சிப்பதாக EGI மீது புகார் அளிக்கப்பட்டது.
அதன் தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களுக்கு எதிராக மாநில அரசாங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளரான நங்கோம் சரத் சிங், புகார் அளித்தார். இரண்டாவது புகார் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள குரையைச் சேர்ந்த சொரோகைபம் தௌதம் சங்கீதா என்பவரால் அளிக்கப்பட்டது.
எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா மீது புகார்:
இதற்கிடையே, EGI மீது மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் EGI வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்து கொண்டது. EGI மீது புகார் அளித்தவர்களை நோக்கி இந்திய தலைமை நீதிபதி இன்றைய விசாரணையின்போது சரமாரி கேள்வி எழுப்பினார்.
"மணிப்பூர் வன்முறை தொடர்பாக EGI வெளியிட்ட அறிக்கை சரியாக இருக்கலாம். தவறாக இருக்கலாம். ஆனால், அதன் கருத்துக்களை வெளியிடுவதற்கு பேச்சுரிமை உண்டு" என சந்திரசூட் தெரிவித்தார்.
"புகார்களில் அவர்கள் மீது கூறப்படும் குற்றங்களில் ஒரு சிறு உண்மை கூட கிடையாது. எந்த விதத்தில் அவர்களின் அறிக்கையின் காரணமாக இந்த குற்றங்கள் நடைபெற்றதாக கூறுகிறீர்கள். இந்திய தண்டனைச் சட்டம் 153A பிரிவின் [வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிக்கும்] கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எதன் அடிப்படையில் இதன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது? அவர்கள் [EGI] தங்கள் கருத்துக்களை முன்வைக்க உரிமை உண்டு. இது ஒரு அறிக்கை மட்டுமே. எதன் அடிப்படையில் அவர்கள் மீது இந்த குற்றத்தை சுமத்தி இருக்கீறிர்கள்" என இந்திய தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.