ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்:
ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகளுடனான என்கவுண்டர் சம்பவத்தில் ராணுவ அதிகாரிகள் இருவரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் தோஞ்சக், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹிமான்யுன் முஸாமில் பட் ஆகியோர் துப்பாக்கிச்சூட்டின்போது கொல்லப்பட்டனர்.
இதில், கர்னல் மன்பிரீத் சிங், 19 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப்பிரிவு தளபதியாக பொறுப்பு வகித்து வந்தார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் 19 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப்பிரிவு தளபதி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு சல்யூட் அடித்த 6 வயது மகன்:
இந்த நிலையில், கர்னல் மன்பிரீத் சிங்கின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான பஞ்சாப் மாநிலத்தில் நடந்தது. மொஹாலி மாவட்டம் முள்ளன்பூர் கிராமத்தில் நடந்த இறுதி ஊர்வலத்தில் பெருவாரியான கிராம மக்கள் கலந்து கொண்டு கர்னல் மன்பிரீத் சிங்குக்கு அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு ராணுவ சீருடையில் அவரது 6 வயது மகன் சல்யூட் அடித்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தனது தந்தை இறந்தது கூட தெரியாமல் 6 வயது மகனும் 2 வயது மகளும் சல்யூட் அடித்தனர். கிராம மக்கள் அவர்களை தோளில் தூக்கி சுமந்தபடி ராணுவ வீரருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கர்னல் மன்பிரீத் சிங்கின் மனைவி, சகோதரி, தாய் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் ஆறுதல் கூற முடியாத நிலையில் இருந்ததை அந்த இடத்தில் இருந்து காட்சிகள் காட்டுகின்றன.
இறுதி ஊர்வலத்தில் குவிந்த கிராம மக்கள்:
கர்னல் மன்பிரீத் சிங்குடன் வீர மரணம் அடைந்த மேஜர் ஆஷிஷ் தோஞ்சகின் உடலும் அவரது சொந்த ஊரான ஹரியானா மாநிலத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. பானிபட்டில் நடந்த இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுடன் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் சேர்ந்து மேஜர் ஆஷிஷ்க்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஆஷிஷின் உடல் இன்று காலை பிஞ்சோல் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்ட பின்னர் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.
மேஜரின் வீட்டிலிருந்து அடக்கம் செய்ய வேண்டிய இடம் சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக போகும் இடம் எல்லாம் கிராம் மக்கள் கூடியிருந்தனர். இதனால், 8 கி.மீ. தூரத்தை கடக்க கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஆனது.
இதையும் படிக்க: Mark Antony Review: விஷாலை ஓரம் கட்டிய எஸ்.ஜே.சூர்யா.. கொண்டாட வைத்ததா “மார்க் ஆண்டனி” படம்?.. முழு விமர்சனம் இதோ..!