திருடன் என நினைத்து கும்பல் தாக்குதலுக்கு ஆளான காய்கறி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டிராக்டர் உரிமையாளர் தாக்குதல்
45 வயதான காய்கறி வியாபாரி சிரஞ்சி சைனி நேற்று (ஆக.15) அல்வார் மாவட்டம், ரம்பாஸ் கிராமத்தில் காய்கறிப் பண்ணையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.
அந்த சமயத்தில் அப்பகுதியில் டிராக்டர் ஒன்று திருடு போனதை அடுத்து அதனைத் தேடி காவல் துறையினரும், மற்றொரு புறம் சில நபர்களுடன் டிராக்டர் உரிமையாளரும் வந்துள்ளார்.
இந்நிலையில் சிரஞ்சி சைனியை திருடன் எனத் தவறாக நினைத்து டிராக்டர் உரிமையாளரும் அவருடன் வந்தவர்களும் ஒன்று சேர்ந்து அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
மீட்ட காவலர்கள்
மற்றொருபுறம், காவலர்கள் உண்மையான திருடர்களை துரத்திச் சென்று அவர்களை நெருங்கிய நிலையில், காவலர்கள் தங்களை சுற்றி வளைத்ததை உணர்ந்து டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு திருட்டில் ஈடுபட்ட நபர்கள் தப்பியோடி உள்ளனர்.
இந்நிலையில் சைனி தாக்கப்படுவதை அறிந்து அங்கு விரைந்த காவலர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று முதலுதவி அளித்துள்ளனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இன்று (ஆக.16) மாலை சைனி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிராமத்தினர் முற்றுகைப் போராட்டம்
இந்நிலையில் சைனி அடித்துக் கொல்லப்பட்டதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி முன்னதாக காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் சைனியின் மரணத்துக்கு உரிய இழப்பீடு வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சூழலில் முன்னதாக சிரஞ்சி சைனியின் மகன் யோகேஷ் சைனி தன் தந்தையின் மரணத்துக்கு காரணமான டிராக்டர் உரிமையாளர் விக்ரம் உள்பட இருவர் மீது புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : Salman Rushdie: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து...! நடந்தது என்ன?
மேலும் படிக்க : புவிசார் அரசியல் பதற்றத்தை தூண்டியுள்ள சீன ஆராய்ச்சி கப்பல்: பேசுபொருள் ஆனது ஏன்?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்