தேர்தலில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு விசாரணையில் தங்களையும் இணைக்கக்கோரி திமுக மனு அளித்துள்ளது.


தேர்தலில் இலவசங்களை அறிவிக்க தடைக்கோரி அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக இணைக்கக்கோரி திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், “ பல்வேறு தரப்பு மக்களை கொண்ட நாட்டில் ஒவ்வொரு பகுதிக்குமான தேவை வெவ்வேறாக உள்ளது. ஒரே திட்டம் என்பது அனைவருக்கும் பொருந்தாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக கடந்த 13 ம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் இலவசங்கள் குறித்து பேசினார். அதில், ”சொந்த தொகுதிக்கு வரும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கல்வி அனைவருக்கும் எளிய முறையில் கிடைத்தது. மாணவர் சமுதாயம் மீது இருக்கும் அக்கறையின் காரணமாக இதை செய்வதை அரசின் கடமையாகக் கருதுகிறோம்.


இலவசம் வேறு, நலத்திட்டம் வேறு என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக நாட்டில் பெரிய விவாதமே தற்போது நடைபெற்று வருகிறது. கல்விக்காகவும் மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது இலவசமாகாது.


இலவசம் Vs சமூக நலத்திட்டங்கள்


ஏனென்றால் அது அறிவு நலம் சார்ந்தது கல்வி. உடல் நலம் சார்ந்தது மருத்துவம். இரண்டிலும் போதுமான அளவு மக்களுக்கு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என அரசு நினைக்கிறது.


இலவசம் என்று கூறும்போது இதைத் தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இல்லம் தேடி கல்வி, கல்லூரிக் கனவு, நான் முதல்வன், பள்ளிகளில் காலை சிற்றுண்டி, மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்கள் அனைத்துமே மக்கள் நலத் திட்டங்களாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இவையெல்லாம் இலவசங்கள் அல்ல, சமூக நலத் திட்டங்கள். ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கு உதவும் வகையில் இவை செயல்படுத்தப்படுகின்றன.


இலவசம் கூடாது என அறிவுரை கூற சிலர் புதிதாக வந்திருக்கிறார்கள். அது பற்றி நமக்கு கவலை இல்லை. இது பற்றி இதற்கு மேல் பேசினால் அது அரசியல் ஆகிவிடும், இங்கே அதை பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.


பெண்கள் சொந்தக் காலில் நில்லுங்கள்


தொடர்ந்து பேசிய அவர், “உங்கள் படிப்பிலே கவனம் செலுத்துங்கள், உங்கள் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். உயர் கல்வியைத் தொடருங்கள், குறிப்பாக பெண்கள் பட்டம் வாங்கியதோடு நிற்காமல், தகுதியான பணிகளைத் தேர்ந்தெடுத்து பணியாற்ற வேண்டும். பொருளாதார ரீதியாக சொந்தக்காலில் நிற்கக்கூடிய தன்னம்பிக்கையை அனைவரும் பெற வேண்டும் என்பதை உங்கள் தந்தையாக நின்று உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்" எனப் பேசினார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.