இலங்கைக்கு வருவதாக இருந்த சீன ஆராய்ச்சி கப்பல், உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதில், ஆயுதங்கள் ஏற்றி செல்லப்படவில்லை எனக் கூறப்பட்டாலும் இலங்கைக்கு இந்த கப்பல் வருவது குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது.


இந்திய பெருங்கடலில்தான் குறிப்பிட்ட அந்த கப்பல் சுற்றி வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த கப்பல் எங்கு செல்ல போகிறது என்பது குறித்து தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை.


ஆனால், கடந்த வாரம், இந்திய, அமெரிக்க, சீன நாடுகளுக்கிடையே புவிசார் அரசியல் பதற்றம் ஏற்பட 730 அடி நீளமுள்ள சீன செயற்கைகோள் கண்காணிப்பு கப்பல் காரணமாக அமைந்தது. மற்ற நாடுகளிடம் இலங்கை நிதியுதவியை நாடியுள்ள நிலையில், இப்பிரச்சினை அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.


யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சி கப்பல் சீனாவில் இருந்து இலங்கையின் தெற்கு முனையிலுள்ள ஹம்பதோட்டா துறைமுகத்திற்கு வந்து, எரிபொருள் உள்ளிட்ட பொருள்களை நிரப்புவதற்காக அனுமதி கேட்டிருந்தது. இலங்கை அரசு அனுமதி வழங்கியதையடுத்து, இலங்கையை நோக்கி அந்த கப்பல் வந்து கொண்டிருக்கிறது. 


சீன கப்பல் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மற்றும் அமெரிக்க அலுவலர்கள் இலங்கை அரசின் அனுமதியை ரத்து செய்யுமாறு கடுமையாக அழுத்தம் கொடுத்தது. இதன் காரணமாக, சீனா கோபமடைந்துள்ளது.


இப்பிரச்னையில் நடுவில் சிக்கியுள்ள இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சகம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கப்பலின் பயணத்தை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீடித்த நட்புறவையும் சிறந்த உறவுகளையும் மீண்டும் உறுதிப்படுத்த விரும்புவதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.


கப்பல் வேகம் குறைக்கப்பட்டு அதன் திசை மாற்றப்பட்டதாகவும் பின்னர் மீண்டும் திசை மாற்றப்பட்டு இலங்கையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. வியாழக்கிழமைதான், யுவான் வாங் 5 என்ற அந்த கப்பல் இலங்கைக்கு வரவிருந்தது.


இச்சூழலில், சீன கப்பல் ஹம்பதோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்படாலாமா என்பது குறித்து சீனாவிடம் இலங்கை அலுவலர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்படி, அனுமதி வழங்கப்பட்டால் கப்பல் நிறுத்தப்பட வேண்டிய நேரம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அலுவலர் தெரிவித்துள்ளார்.


இப்பிரச்சினைக்கு பின்னணியில் அமெரிக்க, சீன, இந்தியா ஆகிய நாடுகள் தங்கள் செல்வாக்கை நிலைநாட்ட பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்றும் இலங்கை அலுவலர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். 


ஹம்பத்தோட்டைக்கு சீன கடற்படைக் கப்பல் வருவது வியூக ரீதியான முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை என்றாலும், இலங்கை அரசு அதன் கடனைப் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரத்தில், இலங்கையின் பெரிய கடனாளியான சீனாவுக்கு அந்நாடு சிறப்புச் சலுகை அளிப்பது போல பார்க்கப்படும் என இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வாதம் முன்வைத்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண