உத்தர பிரதேசம் மாநிலம் மீரட் கிராமத்தில் கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி, நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லும் போது காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பாலியல் வல்லுறவு காரணமாக மரணமடைந்த 14 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வந்தவர் என்றும், சம்பவத்தின் போது தனது கிரமாத்துக்கு அருகே உள்ள பயிற்சி வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது.


முதல் தகவல் அறிக்கையில்" பயிற்சி வகுப்புக்கு சென்று இருந்த மாணவி , மாலை 5.30 மணியளவில் சோர்வு நிலையில் வீடு திரும்பினார். தனது தாயாரிடம் லக்கான் மற்றும் அவரின் மூன்று நண்பர்கள் தன்னை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாகவும், விஷத்தன்மை அடங்கிய பொருளைக் குடிக்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும் கூறினார். குடும்பத்தினர் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை பலனின்றி சிறுமி மரணமடைந்தார்,” என்று தெரிவிக்கப்பட்டது.  


குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில், லக்கான் மற்றும் விகாஸ் ஆகிய இருவரை மீரட் காவல்துறை கைது செய்தது. இந்நிலையில், கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லும் வழியில், லக்கான் காவல்துறை அதிகாரிகளை தாக்க முயற்சித்திருக்கிறார். 


சர்தனா வட்ட அலுவலர் ராஜேந்திர குமார் ஷாஹி கூறுகையில், “சனிக்கிழமை காலை கப்சாத் கிராமத்தில் இருந்து மீரட் நீதிமன்றத்திற்கு குற்றவாளிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். பாகுபலி தொழிற்சாலைக்கு அருகில் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால் வாகனம் மெதுவாக நகர்ந்தது. திடீரென்று, லக்கான் ஹெட் கான்ஸ்டபிள் சீதம் சிங்கின் துப்பாக்கியைப் பறித்து, வாகனத்திலிருந்து தப்பித்தார். காவல்துறை அதிகாரிகள் அவரை பின்த் தொடர்ந்தனர். அப்போது, அவர் காவல்துறை அதிகாரிகளை நோக்கி  துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்தார். தற்காப்பு காரணங்களுக்காக காவல்துறை அவரை சுட்டு பிடித்தது, ”என்று தெரிவித்தார்.  


குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் ஒருவர் சிறுமி படித்த அதே கல்வி பயிற்சி மையத்தில் படித்து வந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது . மற்ற இரண்டு இளைஞர்களை கைது செய்ய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.