உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது பரபங்கி. இந்த பகுதியில் உள்ளது சிராவுலி கவுஸ்பர். இந்த பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஒன்றரை வயது மகளுக்கு பெற்றோர்கள் மக்காச்சோளம் அளித்துள்ளனர். அப்போது. மக்காச்சோளம் குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால், குழந்தை மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளது.


இதையடுத்து, உடனடியாக சிராவுலி கவுஸ்பர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அவசரம், அவசரமாக தூக்கிச்சென்றுள்ளனர். இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றபோது, மருத்துவமனையில் பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் பணியில் இல்லை. இதையடுத்து, பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் தர்மேந்திர குப்தாவிற்கு தகவல் அளிக்கப்பட்டது.




ஆனால், அவர் தனது வீட்டில் போதையில் இருந்துள்ளார். இருப்பினும், போதையிலே மருத்துவமனைக்கு வந்த மருத்துவர் தர்மேந்திர குப்தா குழந்தைக்கு சிகிச்சை அளித்துள்ளார். மருத்துவர் தர்மேந்திர குப்தா போதையில் தடுமாறிக் கொண்டிருந்ததால் அவரால் குழந்தைக்கு நிதானமாக சிகிச்சை அளிக்க முடியவில்லை.


ஏற்கனவே ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்த மருத்துவர், தொண்டையில் மக்காச்சோளம் சிக்கிக்கொண்டதால் அவதிக்குள்ளான குழந்தைக்கு தடுமாறிக்கொண்டே சிகிச்சை அளித்ததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தங்களது ஒன்றரை வயது மகள் உயிரிழந்த சம்பவம் அறிந்த பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர்.


இதையடுத்து, தங்களது மகள் உயிரிழப்புக்கு காரணம் போதையில் வந்த மருத்துவர் அளித்த சிகிச்சைதான் காரணம் என்று குழந்தையின் பெற்றோர்களும், உறவினர்களும் குற்றம் சாட்டினர். ஆனால், உயிரிழந்த குழந்தையின் தாயிடம் போதையில் இருந்த மருத்துவர் மிகவும் அலட்சியமாக பதிலளித்தார். அவர் உயிரிழந்த குழந்தையின் தாயிடம், இந்த குழந்தைக்கு பதிலாக இன்னொரு குழந்தை பெற்றுக்கொள் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து, போதையில் சிகிச்சை அளித்த மருத்துவர் நரேந்திர குப்தா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை மருத்துவ அதிகாரி அவதேஷ்குமார் யாதவ் உறுதியளித்துள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த  புகாரும் பெறப்படாத காரணத்தால் காவல்துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. போதையில் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க : Demonetisation : பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக வழக்கு...விசாரிக்கும் உச்சநீதிமன்றம்.. முழு விவரம்..


மேலும் படிக்க : 10% Reservation : பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்புகளுக்கு 10% இடஒதுக்கீடு : தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்