மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு பொது பிரிவில் வரும் முன்னேறிய வகுப்பில் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியிருந்தவர்களுக்காக, 10% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது. இதற்காக அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மற்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

Continues below advertisement

இந்நிலையில் இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வந்தது. இன்று இந்த வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், துஷார் மேத்தா உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தனர். 

 

Continues below advertisement

உச்சநீதிமன்றத்தில் கடந்த 6 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை இன்றுடன் முடிவடைந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையில் முன்வைத்த முக்கிய வாதங்கள் என்னென்ன?

இடஒதுக்கீடு எதிர்ப்பு:

இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக, “பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு மற்ற வகுப்புகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கவில்லை. ஒரு பிரிவிற்கு மட்டும் இதை தருவது இடஒதுக்கீடு முறையை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இது பின்பக்கத்திலிருந்து இடஒதுக்கீட்டில் நுழைவது போல் உள்ளது” என்று வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். 

தமிழ்நாடு அரசு சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சேகர் நப்டே, “பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பதை மட்டும் அடிப்படையாக வைத்து ஒரு இடஒதுக்கீட்டை அளிக்க முடியாது. இந்த இடஒதுக்கீடு தொடர்பாக முடிவு எடுக்கும் முன்பாக நீதிபதிகள் இந்திரா சஹானி (மண்டல் வழக்கு) வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை திரும்பி பார்க்க வேண்டும்” எனக் கூறினார்.

 

இடஒதுக்கீட்டிற்கு ஆதரவு:

இந்த இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “இந்த இடஒதுக்கீட்டு சமூகத்தில் பின் தங்கியிருக்கும் வகுப்புகளுக்கு அளிக்கப்பட்ட 50% இடஒதுக்கீட்டை எந்தவகையிலும் தடுக்கும் வகையில் இல்லை. ஆகவே இந்த இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்புச் சட்ட திருத்தம் செல்லும்” என்று வாதாடினார்.