500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் புதன்கிழமை அன்று விசாரிக்கிறது.


மேல் குறிப்பிட்டு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற நரேந்திர மோடி அரசின் 2016 ஆம் ஆண்டு முடிவுக்கு எதிரான மனுக்களை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது.


கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக மத்திய அரசு தீர்க்கமான போரை அறிவித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.


இதன் காரணமாகத் தீவிரவாதத்துக்குத் துணை போகும் நடவடிக்கைகள் முடக்கப்படும் என்றும், நாட்டில் ஊழல் பெருமளவில் குறையும் என்றும் தெரிவித்தார். மத்திய அரசின் இந்த முடிவு, இந்தியப் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டதாகவும், பொறுப்பற்ற நடவடிக்கை என்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன.


கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ள போட்டபோது, 15.44 லட்சம் கோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. ரிசர்வ் வங்கி, புழக்கத்தில் இருந்த 98.96 விழுக்காடு நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதாக 2018ஆம் ஆண்டு தெரிவித்தது. இதன் மூலம் பெருமளவு பணம் புதிய பணமாக மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.


இதன் மூலம் கறுப்புப் பணம் எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை என்பது தெளிவாகிறது. அதனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் அடிப்படை நோக்கம் முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.


பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. 2016ஆம் ஆண்டு 5.43 கோடி இந்தியர்கள் வருமான வரி செலுத்தி வந்தனர். அடுத்த 2017ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 20 விழுக்காடு வரை உயர்ந்து 6.74 கோடி இந்தியர்கள் வருமான வரி செலுத்தினர். 


அதன் பிறகான ஆண்டுகளில் வருமான வரி கணக்கு செலுத்துபவர்களின் எண்ணிக்கை சற்றுக் குறைவாகவே இருந்து வருகிறது. சென்ற ஆண்டு எண்ணிக்கையின்படி ஆறு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வருமான வரி செலுத்தி இருக்கின்றனர்.


இதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் 10% வரை வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது வாடிக்கையாகும்.