லடாக்கில் சுற்றுலாப்பயணிகள் திபெத்திய காட்டுக் கழுதைகளை காரில் துரத்தி விரட்டியடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலான கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதிகாரி சுசாந்தா நந்தா பகிர்ந்துள்ள வீடியோ


இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், வேகமாக வரும் கார் திபெத்திய காட்டுக் கழுதைகளின் கூட்டத்தைத் துரத்துவதை அந்த வீடியோ காட்டுகிறது. அவை நெருங்கி வரும் வாகனத்திலிருந்து அலறி அடித்து தப்பி ஓடுகின்றன. சுற்றுலாப் பயணிகளின் இந்த மோசமான நடத்தை குறித்து தனது வெறுப்பை வெளிப்படுத்தும் கேப்ஷனை இந்த வீடியோவுடன் சுசாந்தா நந்தா இணைதிருந்தார். “லடாக்கில் திபெத்திய காட்டுக் கழுதையைத் துரத்திச் செல்லும் சுற்றுலாப் பயணிகள். அருவருப்பானது," என்று அவர் எழுதினார்.






கோபத்தை வெளிப்படுத்தும் சமூக ஊடக பயனர்கள்


இந்த வீடியோ இதுவரை ஒரு லட்சத்து பத்தாயிரம் பேருக்கு மேல் சென்றடைந்துள்ளது. இதனை பார்க்கும் பல சமூக ஊடக பயனர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதோடு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். "இதுபோன்ற சுற்றுலாப் பயணிகளுக்கு வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கப்பட வேண்டும்," ஒரு பயனர் கோரினார். மற்றொருவர், "இதுபோன்ற பயணங்களை ஏற்பாடு செய்யும் டிராவல் ஆபரேட்டர்கள் மீது எந்தவித இரக்கமும் இன்றி வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் மற்ற டிராவல் ஆபரேட்டர்கள் இதுபோன்ற செயல்களைச் செய்யத் துணிய மாட்டார்கள்," என்றார். 


தொடர்புடைய செய்திகள்: WI vs NED WC Qualifiers: வெ. இண்டீசை புரட்டி எடுத்த நெதர்லாந்து..சூப்பர் ஓவரில் 30 ரன்கள் விளாசி அபார வெற்றி..!


திபெத்திய காட்டு கழுதை


பலர், ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தல் மற்றும் வனவிலங்கு இடங்களுக்குச் செல்வதைத் தடை செய்தல் உள்ளிட்ட விஷயங்கள் செய்யலாம் என வாதிட்டனர். திபெத்திய காட்டு கழுதை, கியாங் என்றும் அழைக்கப்படுகிறது, இது அனைத்து ஆப்பிரிக்க மற்றும் ஆசிய காட்டு கழுதைகளை விடவும் மிகப்பெரியது. இது லடாக்கின் சாங்தாங் பகுதிக்குள் மட்டுமே இருக்கும், அழிந்து வரும் இனமாகும். இந்திய விலங்கியல் ஆய்வகத்தால் வெளியிடப்பட்ட 'இந்திய விலங்குகள் பற்றிய சிவப்பு தரவு புத்தகத்தில்' இந்த விலங்கு பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972 மற்றும் CITES பின் இணைப்பு II இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது. ரெட் டேட்டா புக்கின் அடிப்படையில், லடாக்கில் 2,000 கியாங்ஸ் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.






சிறுத்தையிடம் வம்பிழுத்த நபர்


இதேபோன்ற ஒரு நிகழ்வில், ஒரு சிறுத்தையின் அருகில் சென்று சஃபாரி வாகனம் நின்ற ஒரு வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. நமீபியாவில் இருந்து வந்த அந்த வீடியோவில், காட்டு விலங்குகளுடன் பழகும் சுற்றுலாப் பயணிகளின் நடத்தை குறித்த கவலையை பலருக்கும் எழுப்பியது.


சஃபாரி ஜீப் டிரைவர், அதனை தூண்டும் வகையில், சில செயல்களில் ஈடுபடுவதை வீடியோ காட்டுகிறது. சிறுத்தையிடம், உணவு வேண்டும் என்றால் “மியாவ்” என்று கத்தும்படி அவர் கூறுகிறார்.


பின்னர் அந்த சிறுத்தை அவரது வாகனத்தின் கதவின் மீது இரண்டு கால்களை தூக்கி வைத்து நிற்கிறது. இந்த வீடியோவும் சில நாட்கள் முன்பு வைரல் ஆகி இருந்தது.