ஐசிசியின் உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், சூப்பர் ஓவர் முறையில் நெதர்லாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.


உலகக்கோப்பை தகுதிச்சுற்று:


நடப்பாண்டு இறுதியில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கு இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான, தகுதிச்சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.


மேற்கிந்திய தீவுகள் - நெதர்லாந்து மோதல்:


இந்த நிலையில் நடைபெற்ற குரூப்-ஏ லீக் போட்டியில் மேற்கிந்திய திவுகள்  அணிக்கு எதிராக நெதர்லாந்து அணி களமிறங்கியது. தக்சிங்கா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய திவுகள் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி வீரர்கள் ஆரம்பம் முதலே நெதர்லாந்தின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.


374 ரன்கள் குவித்த மேற்கிந்திய தீவுகள்:


நிகோலஸ் பூரன் 65 பந்துகளில் 104 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக பிராண்டன் கிங், ஜான்சன் சார்லஸ் ஆகியோர் அரைசதம் விளாசினர். சாய் ஹோப் மற்றும் கீமோ பால் ஆகியோரும் அதிரடியாக ரன் குவித்தனர். இதனால், 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது.


கடைசி பந்தில் திருப்பம்:


இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணி வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக தேஜா நிடமுனுரு அதிரடியாக விளையாடி 111 ரன்களை குவித்தார். ஸ்காட் எட்வர்ட்ஸ் 67 ரன்களை குவித்தார். இருப்பினும் நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 5 பந்துகளில் 7 ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், கடைசி பந்தில் லோகன் வான் பீக் கேட்ச் முறையில் ஆட்டமிழக்க போட்டி சமனில் முடிந்தது.


சூப்பர் ஓவரில் அபாரம்:


இதையடுத்து, போட்டியின் முடிவை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை அமல்படுத்தப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டர் சூப்பர் ஓவரை வீச, லோகன் வான் பீக் எதிர்கொண்டார். அந்த ஓவரில் 4,6,4,6,6,4 என 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட 30 ரன்களை விளாசினார் லோகன். இதையடுத்து 31 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் நெதர்லாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த சூப்பர் ஓவரையும் ஆல்ரவுண்டரான லோகன் வான் பீக் தான் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.