கேரள மாநிலம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் சோமநாதர் கோயில் உள்ளது. இக்கோவிலை சுற்றியிருந்த தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடக்கக் கூடாது என்கிற தடை பல ஆண்டு காலமாக இருந்து வந்தது. இந்த பிரச்சனைக்காக 1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
வைக்கம் போராட்டம்:
இதுதான் வைக்கம் போராட்டமாகும். இந்த அறவழிப் போராட்டத்தை டி.கே.மாதவன் தொடங்கினார். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். எனவே தலைவர்கள் இல்லாமல் போராட்டம் தத்தளித்தது.
கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது இருந்த பெரியார் வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். அங்கு பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு பெரியார் அழைத்துச் சென்று, வைக்கம் வீரர் என்ற பட்டப் பெயரையும் பெற்றார்.
தற்போது இந்த போராட்டத்தின் நூற்றாண்டு விழா கேரள அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கேரளாவுக்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர்:
இதன்படி இந்த நிகழ்ச்சில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புறப்பட்டு கேரளா கொச்சிக்கு சென்றுள்ளார். அவரை, கேரள மாநில தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவி வரவேற்றார். ஸ்டாலினுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவும் கேரளாவிற்கு சென்றுள்ளார்.
அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொச்சியில் இருந்து சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "வைக்கம் போராட்டம் தொடங்கிய நூற்றாண்டின் தொடக்க நாள் இன்று. வரலாற்றின் முக்கியமான நாள்.
இந்தியாவில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டங்கள் அனைத்திற்கும் முன்னோடியாக திகழ்ந்தது வைக்கம் போராட்டம். ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. ஒன்றறை ஆண்டுகளுக்கும் மேல் நடந்த வைக்கம் போராட்டம், 1925 நவம்பர் 23 ஆம் நாள் முடிவுக்கு வந்தது. அதே ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி பெரியார் தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழாவும் நடைபெற்றது.
வைக்கம் போராட்டம் வெற்றி பெறக் காரணமாக இருந்த பெரியாரை போற்றும் விதமாக வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிடுகிறேன். வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. ஓராண்டு முழுவதும் அப்போராட்டத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்கள், மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
வைக்கம் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட அருவிக்குத்து கிராமத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாள் அன்று தமிழ்நாடு அரசால் வைக்கம் விருது வழங்கப்படும்" என்று கூறினார்.