Tirupati : இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் மற்றும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டும் திருப்பதிக்கு வர வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் குவியும் பக்தர்கள்:
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். பாதயாத்திரை, இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை திருமலை திருப்பதி கோயிலில் அர்ஜித சேவைக்கான டிக்கெட் முன்பதிவனது பிப்ரவரி மாதம் 22ம் தேதியே தொடங்கியது. அதன்படி ஆன்லைனில் நடைபெற்ற டிக்கெட் புக்கிங்கில், கல்யாண உத்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோத்சவம், சஹசர தீபாளங்கர சேவை உள்ளிட்ட ஸ்ரீவாரி அர்ஜித சேவைக்கான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டன. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்
அதன்படி, மார்ச் 1 முதல் 31ம் தேதி வரையில் மட்டும், 20 லட்சத்து 57 அயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் மூலம் உண்டியல் காணிக்கையாக 120 கோடியே 29 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. ஒரு கோடியே இரண்டாயிரம் லட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 8 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.
இதனிடையே, தரிசன டோக்கன் வாங்காமல் நேரடியாக வரிசையில் நிற்கும் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தபோது, 2 கி.மீ. தூரத்துக்கு வரிசை நீள்கிறது. திருமலையிலேயே 3 இடங்களில் இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சராசரியாக திருமலையில் 60 ஆயிரத்திற்கு மேல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அதன்படி நேற்று, அதிகாலை 3 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை 85,450 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
தேவஸ்தானம் அறிவிப்பு
இந்நிலையில், சிலர் தரிசன டிக்கெட் இல்லாமல் திருப்பதிக்கு வந்து செல்வதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து, தேவஸ்தான அதிகாரிகள் தரிசன டிக்கெட் இல்லாமல் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என தெரிவித்திருக்கின்றனர். நேரடி இலவச தரிசனத்திற்கு வருவதை பக்தர்கள் சில நாட்கள் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க
பாஜகவில் ஐக்கியமாகும் அதிமுக முன்னாள் எம்.பி..? டெல்லியில் அரசியல் சந்திப்பு..!