கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சென்ற மார்ச் 30ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்து தல’. 


பத்து தல வசூல் நிலவரம்


கன்னட படமான முஃப்டி திரைப்படத்தின் ரீமேக்கான பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர், சந்தோஷ் பிரதாப், அனு சித்தாரா, கலையரசன், டீஜே  உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ஸ்டுடியோ க்ரீன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ள நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். கன்னியாகுமரி பகுதிகளில் நிகழும் மணல் மாஃபியாவை அடிப்படையாகக் கொண்டு பத்து தல படத்தின் கதை அமைந்துள்ளது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.


கலவையான விமர்சனங்கள்


ஏஜிஆர் எனும் மாஃபியா கும்பல் தலைவனாக, முதமைச்சரையே நிர்ணயிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட டான் கதாபாத்திரத்தில் சிம்பு இந்தப் படத்தில் ரசிகர்களைக் கவர்ந்திருந்தாலும், கன்னட ஒரிஜினல் படம் அளவுக்கு பத்து தல படம் இல்லை என ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.


இந்நிலையில் பத்து தல படம் இந்தியா முழுவதும் 15.88 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் தகவல்களை வெளியிடும் sacnilk இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.  


மேலும் இந்தியாவில் முதல் நாள் 5.25 கோடிகளும், இரண்டாம் நாள் 1.85 கோடி வசூலையும், மூன்றாம் நாள் 2.6 கோடி வசூலையும், நான்காம் நாள் 2.9 கோடி வசூலையும், ஐந்தாம் நாள் 1.05 கோடிகளையும் , ஆறாம் நாள் 1.2 கோடிகளையும், ஏழாம் நாள் 0.23 கோடிகளும், எட்டாம் நாள் 0.8 கோடிகளும் படம் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பத்து தல திரைப்படத்தின் வசூல் முதல் வார இறுதியில் குறையத் தொடங்கிய நிலையில், இதுவரை 15.88 கோடிகள் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


விடுதலை Vs பத்து தல


பத்து தல படம் தமிழ்நாட்டில் மட்டும் 500 ஸ்க்ரீன்களில் வெளியான நிலையில், மார்ச் 31ஆம் தேதி வெளியான விடுதலை முதல் பாகம் 400 ஸ்க்ரீன்களில் வெளியானது.


இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலித்து வருகிறது.


இதேபோல் இந்தியா முழுவதும் விடுதலை படம் 8 நாள்களில் 22.65 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் தகவல்களை வெளியிடும் Sacnilk தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதல் நாள் 3.85 கோடிகளையும்,  இரண்டாம் நாள் 3.8 கோடி ரூபாய் வசூலும், மூன்றாம் நாள் 5.05 கோடி ரூபாய் வசூலையும் நான்காம் நாள் 2 கோடிகளும், ஐந்தாம் நாள் 2.20 கோடிகளையும், ஆறாம் நாள் 1.95 கோடிகளையும், ஏழாம் நாள் 1.75 கோடிகளையும், எட்டாம் நாளான நேற்று தோராயமாக 2 கோடிகளையும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.