அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்:


கடந்தாண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதிதான், அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கப்பட்டார். கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, அப்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் மைத்ரேயன்.


அதிமுகவில் நீக்கப்படுவதற்கு முன்பு அக்கட்சியின் அமைப்பு செயலாளராக பதவி வகித்து வந்தார். மாநிலங்களவை உறுப்பினராகவும் மைத்ரேயன் பதவி வகித்துள்ளார். அதிமுகவில் இணைவதற்கு முன்பு தமிழ்நாடு பாஜகவில் பல்வேறு முக்கிய பதவிகளில் மைத்ரேயன் இருந்துள்ளார்.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுக இரண்டாக உடைந்தது. அந்த சமயத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்த மைத்ரேயன் பின்னர், எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்தார். பரபரப்பான அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் மைத்ரேயன், மீண்டும் பன்னீர்செல்வத்தின் அணியில் இணைந்தார்.


பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்பி:


அதிமுக, பாஜக கூட்டணிக்கு இடையே சலசலப்பு நிலவி வரும் நிலையில், இந்த கூட்டணி தொடருமா? என கேள்வி எழும் அளவுக்கு தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. இதற்கு மத்தியில், அதிமுகவின் முன்னாள் எம்பி பாஜகவில் இணைய உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.


பாஜகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் அதிமுகவில் இணைந்ததுதான் அதிமுக பாஜக கட்சிகளுக்கு இடையே மோதல் வெடிப்பதற்கு முக்கிய காரணம்.  தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி, அப்போதைய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.


இந்த அரசியல் நகர்வு தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பியது. ஏன் என்றால், பாஜகவில் இருந்து விலகும்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது சரமாரி குற்றச்சாட்டு சுமத்திவிட்டு கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தது பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 


இதனால், அதிமுக கூட்டணியில் பாஜக தொடருமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க. கூட்டணியை உறுதி செய்து பேசியிருந்தார்.


இதையடுத்து, அமித்ஷா இவ்வாறு கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இதைதான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம். நாடாளுமன்ற தேர்தலுக்கும் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தொடரும். அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது" என எடப்பாடி பழனிசாமி உடைத்து பேசியது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: ஆஸ்கர் புகழ் பொம்மன், பெல்லி தம்பதியை சந்தித்த பிரதமர் மோடி... நீலகிரியில் நெகிழ்ச்சி..!