நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதன் மூலம் இந்தியா வரலாறு படைத்த சில நாட்களுக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் எஸ் சோமநாத் ஞாயிற்றுக்கிழமை கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பௌர்ணமிகாவு-பத்ரகாளி கோயிலில் பிரார்த்தனை செய்தார்.
அறிவியலும் ஆன்மீகமும்
கோவிலில் தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரபல விஞ்ஞானி, ”அறிவியலும் நம்பிக்கையும் இருவேறு விஷயங்கள் என்றும், இரண்டையும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றும் கூறினார். கோவிலுக்கு சென்றது பற்றி சோமநாத், “நான் ஒரு ஆய்வாளர். நான் நிலவின் உள்ளே ஆராய்கிறேன். அறிவியல் மற்றும் ஆன்மீகம் இரண்டையும் ஆராய்வது எனது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதி. நான் பல கோவில்களுக்குச் சென்று பல நூல்களைப் படிப்பேன். இந்த பிரபஞ்சத்தில் நமது இருப்பு மற்றும் நமது பயணத்தின் அர்த்தத்தைக் கண்டறிய முயற்சிக்கிறேன். இது நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இவையெல்லாம் நாம் அனைவரும் நம் சுயத்தை ஆராய்வதற்கும் கண்டுபிடிப்பதற்கும் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே வெளியில் நான் அறிவியலை ஆய்வு செய்கிறேன், உள் மனதிற்காக நான் கோயில்களுக்கு வருகிறேன், ”என்று அவர் கூறினார்.
சிவசக்தி என்று பெயர் வைத்தது தவறில்லை
நிலவில் சந்திரயான் 2 தரையிறங்கிய தளத்திற்கு ‘சிவசக்தி’ என்று பெயரிடுவது தொடர்பாக எந்த சர்ச்சையும் இல்லை என்றும், அந்த இடத்திற்கு பெயரிட தேசத்திற்கு உரிமை உண்டு என்றும் அவர் வலியுறுத்தினார். "பிரதமர் நரேந்திர மோடி சிவசக்தி என்ற பெயருக்கான அர்த்தத்தை நம் அனைவருக்கும் பொருந்தும் வகையில் கூறினார். அதில் தவறில்லை என்று நினைக்கிறேன். மேலும் அவர் மூவர்வண கொடிக்கு இன்னொரு பெயரைக் கொடுத்தார். இரண்டும் இந்தியப் பெயர்கள். நாம் என்ன செய்கிறோம் என்பதில், நமக்கு ஒரு தனித்துவம் இருக்க வேண்டும். நாட்டின் பிரதமர் என்ற வகையில், பெயரிடும் தனிச்சிறப்பு அவருக்கு உள்ளது," என்று அவர் கூறினார்.
நிலவின் மேற்பரப்பு சவால் அளிக்கிறது
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்று கூறிய இஸ்ரோ தலைவர், தென் துருவத்தில் நிலவின் மேற்பரப்பு ஏற்றங்கள் மற்றும் பள்ளத்தாக்குகளுடன் மிகவும் வித்தியாசமாக சவால் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், சிறிய பிழை கூட லேண்டர் தோல்வியடைய வழிவகுக்கும் என்றும் கூறினார். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதை இஸ்ரோ விரும்புவதாக அவர் கூறினார். ஏனெனில் அதன் மேற்பரப்பு கனிமங்களால் நிறைந்துள்ளது என்றார். ரோவர் நிலவின் மேற்பரப்பில் இருந்து சரியான விஷயங்களை கண்டறிந்து, வழங்கியவுடன், அதன் பிறகான நடவடிக்கைகள் விஞ்ஞானிகளால் துரிதப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன் மிஷன் தயாராக உள்ளது
பணியின் தற்போதைய நிலை குறித்து அவரிடம் கேட்டபோது, “எல்லாம் நன்றாக வேலை செய்கிறது. சந்திரயான் 3, லேண்டர், ரோவர் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. எனவே செப்டம்பர் 3-க்கு முன் முழு திறனுடன் அனைத்து சோதனைகளையும் முடிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்காக பல்வேறு முறைகளும் திட்டங்களும் எங்களிடம் உள்ளன," என்றார். ISRO தலைவர் சூரியனை ஆய்வு செய்யும் மிஷன் குறித்தும் பேசியதுடன், அது ஏற்கனவே தயாராக உள்ளது என்றும், ஏவும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். இந்த பணியில் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அனைத்தும் சரியாக நடந்தால் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், இல்லையெனில் ஒத்திவைக்கப்படும்” என்றும் மூத்த விஞ்ஞானி சோம்நாத் தெரிவித்தார்.
புகைப்படங்கள் பெறுவதில் உள்ள சிரமம்
”சந்திரனின் மேற்பரப்பில் இருந்து ரோவர் எடுக்கும் புகைப்படங்கள் இஸ்ரோ நிலையங்களை சென்றடைய நேரம் எடுக்கும் என்று கூறிய சோமநாத், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பிற நாடுகளின், க்ரவுண்ட் நிலையங்களின் ஆதரவை இஸ்ரோ நாடியுள்ளது” என்றார். ”நிலவின் மேற்பரப்பில் வளிமண்டலம் இல்லாததால், நிழல்கள் அனைத்தும் இருட்டாக இருப்பதாகவும், இதனால் தெளிவான புகைப்படங்களைப் பெறுவதில் சிரமம் இருப்பதாகவும்” அவர் கூறினார்.