கவிஞர் மதுமிதா சுக்லா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் உ.பி.யின் முன்னாள் அமைச்சர் அமர்மணி திரிபாதி மற்றும் அவரது மனைவி மதுமணி ஆகியோர், சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என கோரக்பூர் சிறை கண்காணிப்பாளர் திலீப் பாண்டே தெரிவித்தார்.
மதுமிதா கொலை வழக்கு
உத்தரபிரதேசத்தின், நௌதன்வா தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமர்மணி திரிபாதி, 2001ல் பாஜக மாநில அரசில் அமைச்சராக இருந்தவர். முலாயம் ஆட்சியில் சமாஜ்வாடி கட்சியில் இருந்த அவர், பின்னர் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மாறினார். இந்நிலையில், கர்ப்பமாக இருந்த கவிஞர் மதுமிதா 2003 மே 9 அன்று லக்னோவில் உள்ள காகித ஆலை காலனியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் உறவு வைத்திருந்ததாகக் கூறப்படும் அமர்மணி திரிபாதி, செப்டம்பர் 2003 இல், கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
2007 அக்டோபரில் மதுமிதா கொலைக்கு அமர்மணி திரிபாதி மற்றும் அவரது மனைவி மதுமணி திரிபாதி ஆகியோர்தான் காரணம் என்று ஆயுள் தண்டனை விதித்து டேராடூன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர் அந்த தீர்ப்பை நைனிடால் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன. இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
வயது முதிர்வு காரணமாக விடுதலை
தற்போது அமர்மணி திரிபாதி 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறைவு செய்துள்ளதால், 2018 ஆம் ஆண்டு விடுதலைக்கான அரசின் கொள்கையை மேற்கோள் காட்டி, சிறைத் துறை வியாழக்கிழமை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அமர்மணிக்கு 66 வயது மற்றும் அவரது மனைவி மதுமணிக்கு 61 வயது என்பதால் அவர்களது முதுமை மற்றும் நல்ல நடத்தையை மேற்கோள் காட்டி இந்த விடுதலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மதுமிதாவின் சகோதரி எதிர்ப்பு
அமர்மணி திரிபாதியும் அவரது மனைவியும் தற்போது உடல்நலக் காரணங்களுக்காக கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பிரதாயப் பணிகள் முடிவடைந்தால், வெள்ளிக்கிழமைக்குப் பிறகு விடுவிக்கப்படலாம் என்று கோரக்பூர் மாவட்ட சிறைக் காவலர் ஏ.கே.குஷ்வாஹா தெரிவித்திருந்தார். இந்த சட்டப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த மதுமிதா சுக்லாவின் சகோதரி நிதி சுக்லா, இந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும், தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் இதன்மூலம் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அவர்கள் தண்டனையை அனுபவிக்கவில்லை
"இது நடக்கும் என்று நான் எல்லோரிடமும் கூறி இருந்தேன். நான் ஆர்டிஐ மூலம் ஆவணங்களை வாங்கியிருந்தேன். அதில் இருவரும் அனுபவித்ததாகக் கூறப்படும் சிறைத்தண்டனையில் 62 சதவீதம் சிறைக்கு வெளியேதான் செலவிடப்பட்டுள்ளது. 2012 மற்றும் 2023 க்கு இடையில் அவர்கள் சிறையிலேயே இல்லை என்று கூறப்படுகிறது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மாநில தகவல் ஆணையத்தின் மூலம் நான் பெற்ற அரசாங்க ஆவணங்கள் இதைத்தான் கூறுகின்றன," என்று நிதி சுக்லா பிடிஐயிடம் கூறினார். முன்கூட்டியே விடுதலை பெறுவதற்காக அவர்கள் அதிகாரிகளை தவறாக வழிநடத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.