2014-ஆம் ஆண்டு, 2019-ஆம் ஆண்டு என நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க. அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், இன்னும் 9 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க தனது வெற்றியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. அதே சமயம் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்து களம் இறங்கியுள்ளனர்.


முதல் முறையாக ஜூன் மாதம் 23 ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து  இரண்டாவது கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக அது பெங்களூருக்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் கடந்த மாதம் 17 மற்றும் 18- ஆம் தேதி பெங்களூரில் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விஷயங்களை குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கியமாக இந்த எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு ‘ I.N.D.I.A’  - இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் அனைவரும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான இந்த கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது? ஏன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.






இதனை தொடர்ந்து மூன்றாவது கூட்டம் வரும் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகல் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ மும்பையில் நடைபெறும் I.N.D.I.A கூட்டணியில் தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கப்படும். தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் தொடர்பான விஷயங்கள் குறித்து விரிவாக பேசப்படும். அதுமட்டுமின்றி கூட்டணியின் இதர செயல்திட்டங்களும் இறுதி செய்யப்படும். மும்பையில் நடைபெறும் கூட்டத்தின்போது தற்போது இருக்கும் கட்சிகள் தவிர வேறு சில கட்சிகளும் I.N.D.I.A. கூட்டணியில் இணைய உள்ளனர். இந்த கூட்டணியில் அதிகப்படியான கட்சிகளை சேர்க்க உள்ளேன். எனது பாதை அதுதான் எனக்கு வேறு ஆசை எதுவும் கிடையாது” என  குறிப்பிட்டார்.