கொரோனா தொற்றுநோய் தற்போது இந்தியாவில் அதிகம் பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பூசி செலுத்தும் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து உலக சுகாதார மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வைரஸ் மாறுபாட்டின் புதிய தொற்று மக்களிடையே அதிக பாதிப்பு ஏற்படுத்துகிறது. குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு தடுப்பூசி தேவைபடவில்லை என்றாலும் இணை நோயாளிகள் மற்றும் முதியவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திய 6 முதல் 12 மாதத்திற்குள் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
புதிய பரிந்துரைகளின் அடிப்படையில் கொரோனா நோய்தொற்றினால் அதிக பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. புதிய வழிகாட்டுதலின்படி மக்களை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர்.
முதல் பிரிவினர் ( high priority group): வயதானவர்கள், இணைநோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திய பின் 6-12 மாதத்திற்குள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டாம் பிரிவினர் (medium priority group): இணை நோய் இல்லாத இளம் வயதினர், குழந்தைகள், இணை நோய் இருக்கும் 18 வயது மேல் இருப்பவர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் என்றும் இந்த பிரிவினருக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
மூன்றாம் பிரிவினர் ( low priority group): 6 வயது முதல் 17 வயது வரை இருப்பவர்கள் மூன்றாம் பிரிவினராக கருதப்படுகின்றனர். இந்த பிரிவினருக்கு தடுப்பூசி கட்டாயம் இல்லை என்றும் தேவைப்பட்டால் செலுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி என்பது அனைத்து வயதினருக்கும் உகந்தது என உலக சுகாதார அமைப்பு தரப்பில் கூறப்படுகிறது.
2022-ஆம் ஆண்டு இறுதியில் உலக சுகாதார அமைப்பு கொரோனா பாதிப்பு நாட்டில் குறைந்து வருகிறது என தெரிவித்தது. இருப்பினும் தடுப்பூசி போடுவது அவசியம் என வலியுறுத்தியது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,151 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 11, 903 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மகாராஷ்ராவில் 3 பேரும், கேரளாவில் 3 பேரும், கர்நாடகாவில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தினசரி தொற்று பாதிப்பு சதவீதம் என்பது 1.51 சதவீதமாக பதிவாகியுள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவர்களின் சதவீதம் 98.78% உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,336 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.