ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் பாக்கெட்டுகளின் மீது தயிர் என எழுதக்கூடாது என்றும், தாஹி என்று இந்தியில்தான் எழுத வேண்டும் எனவும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) உத்தரவு பிறப்பித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. 


இந்தித் திணிப்பு சர்ச்சை


மத்திய அரசும் இந்தித் திணிப்பு சர்ச்சையும் புதிதல்ல. பன்னெடும் காலமாக இந்தி மொழி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு நெடிய வரலாற்றைக் கொண்டது. 1938-ல் அன்றைய மெட்ராஸ் ராஜதானியின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி, சோதனை முறையில் குறிப்பிட்ட சில பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாகக் கொண்டு வந்தார். 


அதற்கு தமிழறிஞர்களும் மொழி ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல் இந்தி எதிர்ப்பு மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதே கோரிக்கையை வலியுறுத்தி 1939-ல் பெண்கள் மாநாட்டை நடத்தினர். கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு, திட்டம் வாபஸ் பெறப்பட்டது. எனினும் அப்போது தொடங்கிய போராட்டம், 21-ம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. 



 


1946-ல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மீண்டும் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. அதை எதிர்த்தும் போராட்டங்கள் நடைபெற்றன. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தி கட்டாயமாக்கப்படுவதும் போராட்டங்கள் நடைபெறுவதுமாய் இருந்தன. ஆட்சி மொழிச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. 


இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 15 ஆண்டுகள் வரை, அதாவது 1965 வரை ஆங்கிலம் நீடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அலுவல் மொழியாக உள்ள இந்தியை, 1965 ஜனவரி 26 முதல் ஆட்சி மொழியாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டது. 


1963-ல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா, பிரதமர் நேருவுக்குக் கோரிக்கை வைத்தார். '1965-க்கு பிறகு இந்தியை மட்டுமே ஆட்சி மொழியாக்கக் கூடாது. ஆங்கிலம் தொடர வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிக்கக் கூடாது' என்று கேட்டுக் கொண்டார். இதற்கு வட இந்தியத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு நேரு ''இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பி ஏற்கும் வரை ஆங்கிலமே தொடரலாம். இந்தி திணிக்கப்படாது'' என்ற வாக்குறுதியைக் கொடுத்தார். 




 


1965 மொழிப் போர்


எனினும் நேருவின் மறைவுக்குப் பிறகு காட்சிகள் மாறின. 1965 ஜனவரி 26 முதல் ஆட்சி மொழியாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்துத் திமுக துக்க நாளை அனுசரித்தது. ஏராளமான இளைஞர்களும் மாணவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மொழிப் போர் தொடங்கியது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுத்தது. தமிழ் உணர்வாளர்கள் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தீக்குளித்து மாண்டனர். இந்தியாவே குலுங்கியது.


தொடர் போராட்டங்களுக்குப் பிறகு இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும்வரை, ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி உறுதி அளித்தார். பின்னர், 1967-ம் ஆண்டு இந்திரா காந்தியும் அலுவல் மொழிச் சட்டத்தின் மூலம் இதை உறுதி செய்தார்.


எனினும் தொலைக்காட்சி, வானொலி, அரசு அலுவலகங்களில் இந்தி மொழியைப் பயன்படுத்தும் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத கதையாக பாஜக அரசும் இந்தி மொழிப் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. 


இந்த நிலையில், ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் பாக்கெட்டுகளின் மீது தயிர் என எழுதக்கூடாது என்றும், தாஹி என்று இந்தியில்தான் எழுத வேண்டும் எனவும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) உத்தரவு பிறப்பித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


இந்தியில் பெரிய எழுத்துகளிலும் தேவையெனில்மாநில மொழிகளில் அடைப்புக் குறிக்குள்ளும் எழுதலாம் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், மத்திய அரசின்  மறைமுகமான இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது எனவும் அதை ஏற்க முடியாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கூறும்போது, ''இந்தியை இந்தியாகவே திணித்தால் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால், இந்தி சொற்களை தமிழில் எழுதி திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள், வானொலிகள், பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள் ஆகியவை வழியாக இந்தியைத் திணிக்க முயன்று வரும் மத்திய அரசு, இப்போது தமிழ்நாடு அரசின் நிறுவனமான ஆவின் மூலமாகவே இந்தியைத் திணிக்கத் துடிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.


எந்த வழிகளில் இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயன்றாலும் அதை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள்’’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.