கடந்த 2019ஆம் ஆண்டு, கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசிய கருத்து அவரின் அரசியல் வாழ்க்கையையே புரட்டிபோட்டது. பிரதமர் மோடி குறித்து அவர் அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றம் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி நீக்கம் செய்தது.


கெத்து காட்டும் ராகுல் காந்தி:


எங்கு பேசியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டாரோ அதே இடத்தில் இருந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் ராகுல் காந்தி. 2019 மக்களவை தேர்தலை முன்னிட்டு கோலாரில் பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கேள்வி எழுப்பி இருந்தார்.


இந்த கருத்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அவமதிக்கும் வகையில் பேசப்பட்டது என பாஜக குற்றம்சாட்டியது. இதையடுத்து, குஜராத் பாஜகவின் முக்கிய நிர்வாகியான பூர்ணேஷ் மோடி, இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கே, ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.


இந்நிலையில், ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை புரட்டிபோட்ட கோலாரில் ஏப்ரல் 5ஆம் தேதி நடக்கும் பேரணியில் கலந்து கொண்டு பிரச்சாரத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி.


இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் பேசுகையில், "கோலாருக்குத் திரும்பும் ராகுல் காந்தி, சத்யமேவ ஜெயதே பேரணியைத் தொடங்குகிறார். தேர்தல் யாத்திரையை இங்கிருந்து தொடங்குமாறு அவரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். எங்கு அவர் மோடி குறித்த கருத்தை தெரிவித்தாரோ, எதை பேசியதற்காக பாஜக கண்டனம் விடுத்ததோ, அங்கிருந்து தனது மெகா பேரணியை தொடங்குகிறார்.


கர்நாடக தேர்தல்:


கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மே 13ஆம் தேதி, முடிவுகள் வெளியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.


இச்சூழலில், ABP News - CVoter team இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது. கடந்த தேர்தலில் போலவே, இந்த தேர்தலிலும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என அரசியல் வல்லுநர்கள் கருதிய நிலையில், அதற்கு நேர்மாறான தகவல்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளில் வெளியாகியுள்ளது.


கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ், 224 தொகுதிகளில் 121 தொகுதிகளில் வென்றி ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, 74 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. மூன்றாவது முக்கிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம், 29 தொகுதிகளில் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: ABP-CVoter Survey: கர்நாடக கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு குட் நியூஸ்...ஆட்சி இல்லையா? ஆனாலும் ஆதிக்கம் செலுத்தும் பிரதமர்..!