இந்திய எல்லையில் பிரபலமாகும் காஃபி ஷாப்.. காரணம் என்ன தெரியுமா?
காஷ்மீரில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில், ராணுவத்தினராலேயே நடத்தப்படும் கஃபே சுற்றுலாப்பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

காஷ்மீரில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில், ராணுவத்தினராலேயே நடத்தப்படும் கஃபே சுற்றுலாப்பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உணவுப் பிரியர்கள் பலர் தங்களுக்குப் பிடித்த உணவை சாப்பிடுவதற்காக பல கிலோ மீட்டர்கள் பயணம் செய்வார்கள். சிலர் நல்ல அனுபவங்களுக்காக பயணம் செய்வார்கள். ஆனால், நல்ல பயண அனுபவமும், நல்ல உணவும் ஒரே இடத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு அனுபவத்தை தான் கொடுக்கிறது “தி லாக் ஹட் கஃபே”. வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள தவார் பகுதியில் தான் இருக்கிறது இந்த கஃபே. இங்குச் சென்றால் உள்ளூர் மக்கள், சுற்றுலாப்பயணிகள், ராணுவ வீரர்கள் என்று பல்வேறு தரப்பினருடன் பேசிக்கொண்டும், ஹப்பா கட்டூன் மலைப்பகுதியை ரசித்துக்கொண்டும் காஃபி குடிக்கலாம். இப்படி ஒரு சுகானுபவத்தைப் பெற ஸ்ரீநகரில் இருந்து 130 கி.மீ பயணம் செய்ய வேண்டும். இந்த கஃபேவுக்கு இருக்கும் மற்றொரு சிறப்பு, இது முழுக்க முழுக்க ராணுவத்தினரால் நடத்தப்படுகிறது என்பது தான்.
கடந்த ஆண்டு சர்வதேச காஃபி தினத்தில் தான் இந்த “தி லாக் ஹட் கஃபே” தொடங்கப்பட்டது. இந்திய எல்லையான குரேஷ் செக்டாரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் தான் இந்த கஃபேவை நடத்திக்கொண்டிருக்கின்றனர். இந்த பகுதியில் சுற்றுலாவை வளர்ப்பதற்காகவும், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காகவும் இந்த கஃபேவை தொடங்கியதாக ராணுவத்தினர் கூறுகின்றனர்.
எல்லைப் பகுதி சுற்றுலாவை வளர்ப்பதற்காக அப்பகுதி உள்ளூர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும், இந்த தொடர் விழிப்புணர்வால் தற்போது எல்லையில் நிலமை மாறிவருவதாகவும் கூறுகின்றனர். தற்போதைய நிலையில் இப்பகுதியில் 14க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் வாடகை கட்டிடங்கள் ஆகியவை உருவாகியிருப்பதாக ராணுவத்தினர் கூறுகின்றனர். தற்போது குரேஷ் பகுதியைப் பற்றி வெளியே தெரிந்து வருவதால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 15000 பேர் வந்து சென்றதாகவும், இந்த ஆண்டு தற்போது வரையில் 12 ஆயிரம் பேர் வந்து சென்று விட்டதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் 50000 சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக ராணுவா அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த கஃபே குறித்து ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்துறையிடம் கூறப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராணுவ அதிகாரி கூறியுள்ளார்.
Also Read | Plastic Ban Items: இயர் பட்ஸ், பிளாஸ்டிக் கப்; எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை?- முழு விவரம்
இங்கு காஃபி, டீ மட்டுமல்லாமல் காஷ்மீரி உணவான வஸ்வான், மேகி, பீஸா, பாஸ்தா, சாண்ட்விச் உள்ளிட்டவைகளும் கிடைக்கும் என்றும், இவைகள் எல்லா இடங்களிலும் கிடைத்தாலும் இங்கு சாப்பிடுவதற்கு உள்ள சிறப்பு இது முழுக்க முழுக்க உள்ளூர் சமையலர்களைக் கொண்டு சமைப்பதால் சுவை தனித்துவமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
ராணுவத்தினரின் இந்த திட்டம் சுற்றுலாப்பயணிகளிடம் மட்டுமல்லாது உள்ளூர் மக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.