உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள எலான் மஸ்க், இந்த மாதத்தின் நான்காவது வாரத்தில் இந்தியா வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவில், ”பிரதமர் நரேந்திர மோடியை காண ஆவலுடன் உள்ளேன்” என குறிப்பிட்டு இருந்தார்.
எலான் மஸ்கின் இந்திய பயணம் தள்ளிவைப்பு:
இந்த சந்திப்பு, இந்த மாதம் 21 அல்லது 22 தேதிகளில் நடைபெறும் என்றும் இந்திய சந்தையில் டெஸ்லா கார்கள் விற்பனையை தொடங்குவது, உள்நாட்டிலேயே சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து உற்பத்தி ஆலையை தொடங்குவது என்பது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் சந்திப்பின்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஆனால், புதிய பயண தேதி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. எலான் மஸ்கின் இந்திய பயணம் ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
ஆனால், முதல் காலாண்டில் டெஸ்லா நிறுவனத்தின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது தொடர்பாக வரும் 23 ஆம் தேதி, முக்கிய கூட்டம் ஒன்று அமெரிக்காவில் நடக்க உள்ளதாகவும் அதில் பங்கேற்பதற்காகவே தனது இந்திய பயணத்தை அவர் ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காரணம் என்ன?
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் குறிப்பிடுகையில், "துரதிருஷ்டவசமாக, டெஸ்லா நிறுவனத்தில் பல வேலைகள் இருப்பதால் இந்திய பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நான் வருகை தருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
டெஸ்லா நிறுவனத்தை பொறுத்தவரையில், தனது மின்சார வாகனங்களுக்கான தேவையை அதிகரிக்க, சந்தையில் அடுத்து விலையில் பல்வேறு சலுகைகள் வழங்கின. ஆனாலும், அந்நிறுவன வாகன விற்பனை சரிவை சந்தித்து இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில் தான், டெஸ்லாவில் இருந்து பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய மின்சார வாகனக் கொள்கையை இந்தியா அறிவித்த பிறகு, மின்சார வாகனங்களின் இறக்குமதி மீதான வரிகளை கிட்டத்தட்ட 85 சதவிகிதம் வரை குறைக்க திட்டமிட்டுள்ளது. மின்சார வாகன உற்பத்தியாளர்கள் குறைந்தபட்சம் ₹ 4,150 கோடி முதலீடு செய்ய வேண்டும் மற்றும் இந்தியாவில் உற்பத்தி வசதிகளை அமைக்க மூன்று ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட உள்ளது. அப்படி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படுகிறது.
இதையும் படிக்க: Google Lay Off: அலுவலகம் அரசியலுக்கான இடமில்லை”: 28 பேர் பணிநீக்கம் குறித்து கூகுள் தெரிவித்தது என்ன?