உத்தரபிரதேச மாநிலம் பாந்த்ரா மாவட்டத்தில் உள்ள இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் ரீல் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அவர் மீது கட்டடத்தின் ஸ்லாப் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளியில் உள்ள மொட்டை மாடியில், கால்களை ஸ்லாப் இடையே வைத்துக்கொண்டு, உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 21 வயதான இளைஞர் மீது ஸ்லாப் விழுந்ததில் உயிரிழந்தார். அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று அவரது ரீலை மொபைல் போனில் பதிவு செய்து கொண்டிருந்த நண்பர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்:
இளைஞரின் மரணம் குறித்து அறிந்த இளைஞரின் உறவினர்கள், பெரும் சோகத்தில் மூழ்கினர். அவரின் மரணம் குறித்து அறிந்ததும் பள்ளிக்கு வந்தடைந்தனர். முதலில் நடந்ததை அவர்களால் நம்ப முடியவில்லை. இறந்த சிறுவனின் உறவினர்கள் அவரது மரணம் குறித்து வருத்தியது, சுற்றி இருந்தவர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.
இன்ஸ்டாகிராமில் உள்ள ரீலில் 21 வயது பள்ளியின் மொட்டை மாடியில் இருந்து தலைகீழாக தொங்குவதைக் காட்டுகிறது. அவர் இரண்டு செங்கற்களை, ஒவ்வொரு கையிலும் ஒன்றைப் பிடித்துக்கொண்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, பின்னணியில் ஒரு திரைப்படத்தின் உரையாடல் ஒலித்தது. அவர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வீடியோ பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தண்ணீர் சப்ளை செய்த இளைஞர்:
இறந்த 21 வயதான இளைஞரின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்று கூறப்படுகிறது. இவர், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்க கடுமையாக முயன்று வந்தார் என்று சுற்றத்தார் தகவல் தெரிவிக்கின்றனர். ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த இளைஞர், அங்கு இருந்து தண்ணீர் பாக்கெட்டுகளை எடுத்து, ஊர் முழுவதும் ரிக்ஷாவில் சப்ளை செய்து வந்தார். அவரது தந்தை வேறு மாநிலத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.
அச்சுறுத்தும் சில ரீல்ஸ்கள்;
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்தனர். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சில ரீல்ஸ்கள் அச்சுறுத்தலாக மாறிவருகின்றன. எல்லா வயதினரும் "ரீல்ஸ் மோகத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர்" என்றே சொல்லலாம்.
இளைஞர்கள் தங்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரீல் தயாரிப்பதில் ஈடுபடுவதும், சில லைக்குகள் மற்றும் கருத்துக்களுக்காக வாழ்க்கையை இழப்பதும் சோகத்தை ஏற்படுத்துகிறது.