மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தங்களது திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்து வருவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் வளர்ச்சி அடைந்த பிறகு, சமூக வலைதளங்கள் மூலமாகவும் அரசுகள் தங்களது திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று வருகின்றனர்.


தகவல் அறியும் உரிமைச் சட்டம்:


மத்தியில் கடந்த 10 ஆண்டுகாலமாக பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. இதையடுத்து, பா.ஜ.க. ஆட்சியில் விளம்பரங்களுக்காக செய்யப்பட்ட செலவு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிந்துகொள்வதற்காக அஜய் பாசுதேவ் போஸ் என்பவர் கேள்வி எழுப்பியிருந்தார்.


அவரது கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. மத்திய அரசு அளித்துள்ள பதிலில், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி வரை விளம்பரங்களுக்காக செய்யப்பட்ட செலவுகள் ஒவ்வொரு நிதியாண்டு வாரியாக அளிக்கப்பட்டுள்ளது.


விளம்பரங்களுக்கு செய்த செலவுகள்:


மத்திய அரசு அளித்துள்ள பதிலில், அச்சு ஊடகம் எனப்படும் நாளிதழ்களில் விளம்பரங்களுக்காக செய்த செலவுகள் குறித்து தகவல் இல்லை. ஆனால், தொலைக்காட்சி, ரேடியோ, ஆல் இந்தியா ரேடியோ/ தூர்தர்ஷன், சி.ஆர்.எஸ்.,  ஆகியவற்றின் மூலம் விளம்பரம் செய்ததற்காக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி,


2014 -15ம் நிதியாண்டில் ரூபாய் 380.43 கோடியும், 2015-16ம் ஆண்டில் ரூபாய் 415.19 கோடியும், 2016-17ம் ஆண்டில் ரூபாய் 519.53 கோடியும், 2017-18ம் ஆண்டில் ரூபாய் 372.97 கோடியும், 2018-19ம் ஆண்டில் ரூபாய் 396.09 கோடியும், 2019-20ம் ஆண்டில் ரூபாய் 241.77 கோடியும், 2020-21ம் ஆண்டில் ரூபாய் 153.42 கோடியும், ரூபாய் 2021-22ம் ஆண்டில் ரூபாய் 96.13 கோடியும், 2022-23ம் ஆண்டில் ரூபாய் 147.73 கோடியும், 2023-24ம் ஆண்டில் ரூபாய் 250.69 கோடியும் மத்திய அரசு செலவழித்துள்ளது. மொத்தமாக, கடந்த 10 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 973 கோடியே 95 லட்சம் மத்திய அரசு செலவு செய்துள்ளது.


மேலும், மத்திய அரசு பொது வெளியில் போஸ்டர், பேன்னர், டிஜிட்டல் பேனல்கள், ரயில்வே டிக்கெட்டுகளில் செய்த விளம்பரங்களுக்கு ஆன செலவுத் தொகை குறித்து தகவலும் இல்லை. இதுதவிர, குறிப்பாக புதிய ஊடகங்களுக்கு செய்யப்பட்ட செலவுகள் குறித்தும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


3,674 கோடி ரூபாய்:


அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் இணையதளம், குறுஞ்செய்தி, டிஜிட்டல் சினிமா ஆகியவற்றிற்கு செய்யப்பட்ட செலவுகள் குறித்து தனி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


2014-15ம் நிதியாண்டில் ரூபாய் 93.15 கோடியும், 2015-16ம் ஆண்டில் ரூபாய் 126.17 கோடியும், 2016-17ம் ஆண்டில் ரூபாய் 94.15 கோடியும், 2017-18ம் ஆண்டில் ரூபாய் 100.22 கோடியும், 2018-19ம் ஆண்டில் ரூபாய் 111.28 கோடியும், 2019-20ம் ஆண்டில் ரூபாய் 74.53 கோடியும், 2020-21ம் ஆண்டில் ரூபாய் 14.4 கோடியும், 2021-22ம் ஆண்டில் ரூபாய் 6.59 கோடியும், 2022-23ம் ஆண்டில் ரூபாய் 7.56 கோடியும், 2023-24ம் ஆண்டில் ரூபாய் 39.33 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மொத்தமாக தொலைக்காட்சி அல்லாத புது ஊடகங்களுக்க கடந்த 10 ஆண்டுகளில் 700 கோடியே 5 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.


மொத்தமாக மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் விளம்பரங்களை செய்வதற்கு மட்டும் ரூபாய் 3 ஆயிரத்து 674 கோடியை செலவு செய்துள்ளது.


இதில், மக்கள் கொரோனாவால் ஊரடங்கில் அவதிப்பட்ட 2020, 2021 மற்றும் 2022 ஆகிய காலகட்டங்களிலும் மத்திய அரசு விளம்பரங்களுக்காக நூற்றுக்கணக்கான கோடிகளை செலவு செய்தது குறிப்பிடத்தக்கது. நாளிதழ் மற்றும் இன்ன பிற வழி விளம்பரங்களுக்கு செய்த செலவுகள் இன்னும் நூற்றுக்கணக்கான கோடிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.