நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய புல்வாமா தாக்குதலின் மூன்றாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதல் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இந்தியா சார்பில் பிப்ரவரி 26ஆம் தேதி பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இந்தியா விமானப்படை பதில் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகள் முகாமை அழித்தது. இதுவும் இந்தியாவின் இரண்டாவது சர்ஜிகல் ஸ்டிரைக் என்று கூறப்பட்டது.
இதற்கு முன்பாக உரியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க 2016ஆம் ஆண்டு இந்தியா சார்பில் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதைப் பலரும் பாராட்டி வந்தனர். எனினும் இந்த சர்ஜிகல் ஸ்டிரைக் தொடர்பாக இந்திய அரசு உரிய ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் தற்போது இது தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகரராவ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சர்ஜிகல் ஸ்டிரைக் தொடர்பாக கேட்டத்தில் எந்தவித தவறும் இல்லை. தற்போது நானும் கேட்கிறேன். அந்த சர்ஜிகல் ஸ்டிரைக் தொடர்பான விளக்கத்தை இந்திய அரசு மக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டும். ஜனநாயகத்தில் நீங்கள் ஒன்றும் அரசர் கிடையாது. சர்ஜிகல் ஸ்டிரைக்கை பாஜக அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறது. எல்லையில் ராணுவப் படைகள் சண்டை செய்து வருகின்றனர். ஆகவே அந்த வெற்றிக்கு அவர்களை தான் நாம் பாராட்ட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
நேற்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா சர்மா பிஸ்வாஸ், “புல்வாமா தாக்குதலின் நினைவு தினத்தன்று சர்ஜிகல் ஸ்டிரைக் தொடர்பாக ஆதாரம் கேட்டு எதிர்க்கட்சிகள் இந்தியா ராணுவத்தை அவமதித்துள்ளன. சிலர் காந்தி குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க இந்திய ராணுவத்தை அவமதித்துள்ளனர். நான் எப்போதும் இந்திய ராணுவத்திற்கு ஆதராவாக இருப்பேன்” எனக் கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் தெலங்கானா முதலமைச்சரின் கருத்து அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “பிரதமர் அலுவலக கதவை தட்டுங்கள்; கவர்ச்சியாக காட்சியளிக்க...” - சித்ரா ராமகிருஷ்ணனிடம் ஆன்மீக ஆராய்ச்சி செய்த 'இமயமலை யோகி'