ஃபரிதாபாத் நகரத்தின் உயர் அடுக்குமாடிக் குடியிருப்பின் 10வது மாடியில் வசிக்கும் பெண் ஒருவர், கீழே விழுந்த துணிகளை திரும்பப் பெறுவதற்காக, தனது மகனை சேலையால் தொங்கவிட்டு அந்த துணியை எடுத்ததும், பின் அப்படியே அந்தச் சிறுவனை மேலே இழுத்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 வது மாடியில் இருந்து 10 வது மாடிக்கு மெதுவாக மேலே இழுக்கப்படும் போது, அந்தச் சிறுவன் அபாயகரமாக சேலையில் தொங்கிக்கொண்டிருக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. நெட்டிசன்கள் பெண்ணின் கவனக்குறைவும் அலட்சியமும் அவரது மகனின் உயிருக்கு ஆபத்தாக முடியும் விமர்சித்துள்ளனர்.
ஃபரிதாபாத்தின் செக்டார் 82ல் உள்ள புளோரிடா அடுக்குமாடி குடியிருப்பில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் வசிக்கும் ப்ளாக்குக்கு எதிரே உள்ள கட்டிடத்தில் இருந்து படம்பிடிக்கப்பட்ட அந்த வீடியோ, பூட்டப்பட்டதாகக் கூறப்படும் 9 வது மாடி குடியிருப்பின் பால்கனி சுவரில் சிறுவன் ஒருவன் நிறுக்கும் காட்சியைக் காட்டுகிறது. சிறுவன் புடவையின் ஒரு முனையைப் பிடித்தபடி அவனது தாயும் அவனது பாட்டியாக இருக்கக் கூடும் ஒரு வயதான பெண்ணும் அவனை மெதுவாக சேலையின் மற்றொரு நுணியால் மேலே இழுக்கிறார்கள்.
சிறுவன் தொங்கும் உயரத்தைக் காட்ட வீடியோ பெரிதாக்கப்பட்டு, அதை பதிவு செய்த நபர், சிறுவன் கை நழுவிப் போனால் உயிர் பிழைக்க மாட்டார் என்று கூறுகிறார்.
ட்விட்டரில் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள ஐபிஎஸ் அதிகாரி திபான்ஷு கப்ரா, அந்தப் பெண்ணின் செயல் "கவனக்குறைவு, பெற்றோர் என்கிற உணர்வின்மை மற்றும் பொறுப்பற்ற தன்மையின் உச்சம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறுவனின் தாயார், தனது மகனின் உயிரைப் பணயம் வைத்து துணியை எடுத்த தனது செயலுக்குப் பின்னர் வருத்தம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பர்வீன் சரஸ்வத் என்பவர், பிப்ரவரி 6-ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். பூட்டிய மாடியில் விழுந்த துணிகளை மீட்டெடுக்க அந்தப் பெண் கட்டிடத்தில் இருந்த யாரையும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். மாறாகத் தனது குழந்தையை சேலையால் தொங்கவிட்டு, கீழே தரையில் இறக்கிவிட்டு, பின் இழுத்துச் செல்லும் அபாயகரமான முடிவை எடுத்தார் என்று அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர்.