நீதிமன்றம் உத்தரவு


தஞ்சை பள்ளி மாணவி மரணம் தொடர்பான அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அவரது தந்தைக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணை எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் 4 வாரத்தில் தந்தை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


மேலும், வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற கிளைக்கு ஆணைக்கு தடையில்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். பள்ளி மாணவி மரண விவகாரம்  வேண்டுமென்றே அரசியல் ஆக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பு வாதம் செய்தது. இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிமன்றம் இந்த விவகாரத்தை தமிழ்நாடு அரசு கெளரபிரச்னையாக பார்க்க வேண்டாமென தெரிவித்தது


என்ன நடந்தது?


முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி களைக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு ஒருநாள் முன்பு நீதிபதி முன் அளித்த வாக்குமூலத்தில் விடுதிக் காப்பாளர் தன்னை துன்புறுத்தி வந்ததாக குறிப்பிடிருந்தார். இதனடிப்படையில், விடுதிக் காப்பாளரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.  


இந்த நிலையில், தஞ்சை மாணவி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. இந்த, மனுமீதான விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று எடுத்துக் கொண்டது.


முன்னதாக, உயிரிழந்த பள்ளி மாணவியின் தந்தை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். பள்ளியில் மதம் மாற சொல்லி வற்புறுத்திய காரணத்தினால் தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், முறையான வகையில் புலானாய்வு விசாரணையை மேற்கொள்ள தமிழக அரசின் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்றும் தனது மனுவில் கோரிக்கை வைத்தனர்.   




இந்த வழக்கை விசாரித்த ஜி.ஆர்.சாமிநாதன், தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக உத்தரவிட்டார். வழக்கின் தீவிரத்தன்மையை எடுத்துரைப்பதாகக் கூறி, பல்வேறு யூகங்களுக்கு வழிவகுக்கும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.


 உதாரணமாக, பள்ளி இருக்கும் ஊரின் பெயர் மைக்கேல்பட்டி என்று இருப்பதாக குறிப்பட்ட அவர்,  ஊரின் பெயரை வைத்துக் கொண்டு கூட பள்ளியில் மதமாற்றத்திற்கான முயற்சி நடைபெறலாம் என்பதை ஊகிக்க முடிகிறது என்று குறிப்பிட்டார். கிறத்தவர்களின் புனித நூலான பைபிளைச் சுட்டிக்காட்டி, அதில் மதப் பிரசாரம் செய்வது கிறித்துவர்களின் கடமை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, மதமாற்றத்திற்கான முயற்சி பள்ளியில் நடைபெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.


மேலும், இந்தியில் சுதிர் மிஸ்ரா இயக்கிய ‘சீரியஸ் மென்’,  தமிழில் பாலசந்தர் இயக்கிய ‘கல்யாண அகதிகள்’ உள்ளிட்ட  திரைப்படங்களில் வரும் உரையாடல்களையும், தஞ்சை பள்ளி மனைவி தற்கொலை வழக்கோடு இணைத்து பேசினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண