தேசிய பங்கு சந்தையின் (NSE) முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன், பங்கு சந்தை பற்றிய ரகசிய தகவல்களை இமய மலையில் உள்ள சாமியாரிடம் (சிரோன்மணி ('Sironmani')) பகிர்ந்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

  


தேசிய பங்குச் சந்தையின் ரகசியத்தில் ஏற்பட்ட விதிமீறல் தொடர்பாக இந்தியாவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அதன் நிர்வாக இயக்குனர் சித்ராவின் மின்னஞ்சல்களை ஆய்வு செய்தது. இதில், பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றிருப்பதை செபி உறுதி செய்துள்ளது.  


இமயமலை வசிக்கும் யோகி ஒருவரிடம் கடந்த 20 ஆண்டுகளாக  நிதி மேலாண்மை, பங்கு சந்தை ரகசியங்களை சித்ரா பகிர்ந்து கொண்டிருக்கிறார். அலுவலத்தில் பணிபுரியும் பணியாளர்களின் பெயர்கள், அவர்கள் வகிக்கும் பதவியின் பெயர்கள், சம்பள விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சாமியாரிடத்தில் இருந்திருக்கிறது. 




மேலும், தேசிய பங்குச் சந்தையின் பங்குகளை செல்ப்- லிஸ்டிங் (தந்து பங்குச்சிந்தனையில் மட்டும் தனது பங்குகளை விற்கும் வசதி) செய்வதற்கும் அனுமதி வாங்க டெல்லியில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க  சித்ராவை யோகி நிர்பந்தித்திருக்கிறார்.


உதரணமாக, 2015, டிசம்பர் 4ம் தேதியன்று யோகி அனுப்பிய மின்னஞ்சலில், " செல்ப்- லிஸ்டிங் அனுமதி கோரி நிதி அமைச்சர், பிரதமர் அலுவலக அதிகாரி சோமநாதன், அமைச்சரவை செயலாளர், பொருளாதார ஆலோசகர், பிரதம மந்திரி என அனைவரின் கதவுகளையும் தட்ட வேண்டும். பணியாளர் காஞ்சனுக்கு பதவி உயர்வு கிடைக்கு போது அனைத்தும் தானாக நடக்கும்" என்று தெரிவித்துள்ளார். 


மேலும், சித்ரா ராமகிருஷ்ணனின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சாமியாரின் தலையீடுகள் இருந்திருக்கின்றன. முன்னதாக, சித்ரா செபி மேற்கொண்ட விசாரணையில், யோகியைத் தான் நேரில் பார்த்ததில்லை என்றும் மின்னஞ்சல் மூலமே தொடர்பு உள்ளதாகவும், ஆன்மீக குருவாக மட்டும் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.  ஆனால், செபியின் சமீபத்திய விசாரணையில் இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்திருப்பது தெரிய வந்துள்ளது. 




உதாரணமாக, 2015 பிப்ரவரி 15ம் அனுப்பிய மின்னஞ்சலில், "இன்று நீங்கள் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்தீர்கள். மேலும், உங்கள்  தோற்றத்தை கவர்ச்சியாக மாற்ற மூணுக்கால் ஜடை போடுவதை கற்றுக் கொள்ள வேண்டும்!! இந்த ஆலோசனை இலவசம் தான்.  இதைப் எடுத்துக் கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும். மார்ச் மாத  நடுப்பகுதியில் சற்று ஓய்வெடுப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள்.  நான் அனுப்பிய மகர குண்டலப் பாடலைக் கேட்டீர்களா? அந்த இசையின் எதிரொலியை நீங்கள் கேட்க வேண்டும். உங்கள் முகத்திலும்,இதயத்திலிருந்தும் இந்த மகிழ்ச்சியைக் காண்பதில் எனக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. உங்களுடன் நேற்று நேரத்தை செலவு செய்தது மகிழ்ச்சியைத் தருகிறது. உங்களுக்காக நீங்கள் செய்த இத்தகைய சிறிய விஷயங்கள் உங்களை இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் உணர வைக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  


மேலும்," தயார் நிலையில் இருங்கள். நான் அடுத்த மாதம் சீஷெல்ஸ் செல்ல திட்டமிட்டுள்ளேன். உங்களுக்கு நீச்சல் தெரிந்தால், சீஷெல்ஸில் கடலில் குளித்துவிட்டு கடற்கரையில் ஓய்வெடுக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.    


தேசிய பங்குச் சந்தையின் உள்ள பணியாளர்கள் விவரம், பணி நியமனம்,சந்தை செயல்பாடுகள் தொடங்கி  சித்ரா ராமகிருஷ்ணனின் தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்து மட்டத்திலும் சாமியாரின் பங்கு அதிகம் இருப்பதாக செபி தெரிவித்துள்ளது. யோகி என்ற பெயரில் சித்ராவை ஒரு கைகாட்டி பொம்மையாக பயன்படுத்தி தனக்கு வேண்டிய காரியங்களை சாதித்து இருக்கிறார்.    


பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் விசாரணை அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.