தெலங்கானா சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் ஆளும் கட்சியான பாரத் ராஷ்ட்ர சமிதி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 


தெலங்கனா சட்டமன்ற தேர்தல் 


அடுத்தாண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய மற்றும் மாநில கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதற்கு முன்னதாக சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அத்தகைய மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்று. ஆந்திராவில் 2014 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட நிலையில் இதுவரை 2 சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. 


தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ள நிலையில் பெரும்பான்மைக்கு 60 இடங்கள்  தேவை என்ற  நிலை உள்ளது. 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் முந்தைய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (தற்போதைய பாரத் ராஷ்டிர சமிதி கட்சி (பிஆர்எஸ்)) வென்றது. இதன்மூலம் தெலுங்கானா முதல்வராக 2வது முறையாக சந்திரசேகர ராவ் பதவி வகித்து வருகிறார். 


இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அம்மாநிலத்தை பொறுத்தவரை பாரத் ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர்.டி.பி, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் களத்தில் உள்ளது. 2014  ஆம் ஆண்டு 103 இடங்களில் வெற்றி பெற்று இருந்த பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, 2018 ஆம் ஆண்டு தேர்தலில் 88 இடங்களில் தான் வென்றிருந்தது. 


முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு


ஏற்கனவே தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ரிய சமிதி மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. காங்கிரஸூம் தன் பங்குங்கு களத்தில் இருப்பதால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தெலங்கனா சட்டமன்ற தேர்தல் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் தெலுங்கானா தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஆளும் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளார். மொத்தம் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சந்திரசேகர ராவ் அறிவித்துள்ள நிலையில், வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர்.


கடந்த சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களை பொறுத்தவரை இந்தமுறை 7 வேட்பாளர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளனர்.   அதேசமயம் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கஜ்வெல், கமரெட்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் 2023 சட்டமன்ற தேர்தலில் 93 முதல் 105 தொகுதிகள் வரை ஜெயிப்போம் என சந்திரசேகர் ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால் அனைவரது பார்வையும் தெலங்கானா சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி திரும்பியுள்ளது. 


மேலும் படிக்க: Crime: மனைவி, மச்சான், கொழுந்தியாளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞர் - நடந்தது என்ன?