சந்திரயான் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தொலைதொடர்பு இணைப்பு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம், சந்திரயான் 3 நிலவில் தென் துருவத்தில் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 


வெற்றிகரமாக இயங்கி வரும் சந்திரயான் 2 ஆர்பிட்டர்


நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்- 2 கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 48 நாட்கள் பயணத்துக்குப் பின் நவம்பர் 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்-2 வெற்றிகரமாக நுழைந்தது.


எனினும் திடீரென விக்ரம் லேண்டர் கருவியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் அந்தக் கருவியைத் தொடர்புகொள்ள இஸ்ரோ சார்பில் பலமுறை முயற்சி  செய்தது. எனினும் அது சாத்தியமாகவில்லை.  


3 முக்கியக் காரணங்கள்


தரையிறங்கும்போது லேண்டரில் இருந்த 5 இன்ஜின்கள் உருவாக்கிய அதீத உந்து திறன், பிழைகளைக் கண்டறிவதில் மென் பொருளுக்கு இருந்த கட்டுப்பாடுகள், சிறிய அளவிலான தரையிறங்கும் பகுதி ஆகிய காரணங்களால், லேண்டரும் உள்ளே இருந்த ரோவரும் வெடித்துச் சிதறின. ஆர்பிட்டர் மட்டும் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.


தற்போது இந்த ஆர்பிட்டருடன், சந்திரயான் 3 லேண்டர் விக்ரம் இருவழித் தொலைத்தொடர்பை வெற்றிகரமாக ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவில், ’’இருவழி தொலைத்தொடர்பு மூலம் பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான் 3 லேண்டரைத் தொடர்புகொள்ள முடியும்’’ என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் விக்ரம் லேண்டருக்கு தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும். 


அதேபோல, ’’லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள நிகழ்வு, ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5.20 மணியில் இருந்து நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்’’ என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 


சாஃப்ட் லேண்டிங்கில் சிக்கல்


நிலாவில், குறிப்பாக தென் துருவத்தில் தரை இறங்குவது (soft- landings) எவ்வளவு சவாலானது என்பதை லூனா 25 மற்றும் சந்திரயான் 2 ஆகியவற்றின் தோல்விகள் நமக்குப் பறைசாற்றுகின்றன. நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்வதில் தோல்வி என்பது உலக நாடுகளுக்கு ஒன்றும் புதிதில்லை.  1976-ல் இருந்து இதுவரை சீனா என்ற ஒற்றை நாடு மட்டுமே நிலவில் சாஃப்ட் லேண்டிங்கை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. Chang’e 3 மற்றும் Chang’e 4 ஆகிய விண்கலங்கள் இதைச் செய்து முடித்துள்ளன. பிற அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் விண்கலங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன. 


இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றியை உலகமே உற்றுநோக்கி வருகிறது.