மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது மோரினா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள பக்சினி கிராமத்தில் வசித்து வருபவர் திரிலோக் பர்மர். இவருக்கும் பிந்த் மாவட்டத்தில் உள்ள அடெர் பகுதியில் வசித்து வந்த ராக்கி என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடைபெற்றது முதலே திரிலோக் – ராக்கி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.


குடும்பத் தகராறு:


ராக்கிக்கு யுவராஜ் என்ற சகோதரனும், ஜூலி என்ற சகோதரியும் உள்ளனர். அவர்கள் இருவரும் ராக்கிக்கு அவ்வப்போது ஆறுதல் கூறி சமாதானம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த வாரம் வழக்கத்தை விட அதிகளவில் சண்டை நடந்து வந்துள்ளது.


இந்த நிலையில், தங்களது சகோதரியின் பிரச்சினையை நேரில் சென்று சந்திப்பதற்காக ஜூலி மற்றும் யுவராஜ் திரிலோக் பர்மரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு திரிலோக் பர்மரின் தாயை நேரில் கண்டு பேசி ராக்கியை தங்களுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, ராக்கி, யுவராஜ் மற்றும் ஜூலி ஆகிய மூன்று பேரும் அந்த ஊரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தனர்.


துப்பாக்கியால் சுட்டுக்கொலை:


தனது மனைவி அவரது சகோதரன் மற்றும் சகோதரியுடன் அவரது தாய் வீட்டிற்கு செல்வதை அறிந்த திரிலோக் பர்மர் கடும் ஆத்திரம் அடைந்தார். ஆத்திரத்தில் தன் வீட்டில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அவர்களை தேடி பேருந்து நிறுத்தத்திற்கு சென்றார். அங்கு அவர்களை கண்ட திரிலோக் பர்மர் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன் மனைவி ராக்கி, மச்சான் யுவ்ராஜ் மற்றும் மனைவியின் சகோதரி ஜூலி ஆகிய மூன்று பேரையும் சுட்டார்.


துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அலறியடித்து ஓடி வந்தனர். அங்கு ராக்கி மற்றும் யுவராஜ் ரத்த வெள்ளத்தில் பேருந்து நிறுத்தத்தில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர். ஜூலி உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். அவர்கள் 3 பேரையும் சுட்டுக்கொன்ற திரிலோக் பர்மர் தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.


பேருந்து நிறுத்தத்திலே மனைவியையும் அவரது சகோதரன் மற்றும் சகோதரியையும் இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Crime: போலீஸ் அதிகாரிகள் போல நடித்து நகை பறித்த கும்பல் கைது ; கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்


மேலும் படிக்க: Crime : காது குத்து விழாவுக்கு அழைத்து கொலை.. உறவினரை அடித்துக்கொன்ற நபர்.. மூவர் கைது