Eagle Squad - Telengana Police : தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. ட்ரோன்களின் பயன்பாடு சமீபகாலமாக இந்தியாவில் அதிகரித்துள்ளது. சினிமா படப்பிடிப்பு, திருமண படப்பிடிப்பு, காவல்துறை கண்காணிப்பு என பலவற்றிற்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ட்ரோன்களை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத வேலைகளிலும் ஈடுபட்டு வரும் அபாயமும் உள்ளது.
கழுகுப்படை:
பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளிட்டவற்றை கருதி ட்ரோன்களை பயன்படுத்த வேண்டுமென்றால் போலீசின் முன் அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும் என்று காவல்துறையினரும் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தெலங்கானா காவல்துறையினர் சட்டவிரோதமாக மற்றும் சந்தேகத்திற்குரிய வகையில் பறக்கவிடப்படும் ட்ரோன்களை பறிமுதல் செய்வதற்காகவும், வானிலே அதை மடக்கிப்பிடிக்கவும் புதிய உத்தியை கையாண்டுள்ளனர். இரைகளை தனது கூர்மையான மற்றும் வலிமையான கால்களால் கவ்விப்பிடிக்கும் திறன் கொண்ட கழுகுகளையே தெலங்கானா காவல்துறையினர் இதற்காக பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
இரண்டு தொழில் முறை பயிற்சியாளர்களை கொண்டு மூன்று கழுகுகளுக்கு, இதற்காக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று ஆண்டுகள் பயிற்சிக்கு பிறகு, வானில் பறக்கும் ட்ரோன்களை (Drones) கழுகுகள் கனகச்சிதமாக கவ்விப்பிடித்து கீழே கொண்டு வருகின்றன. ஓரிரு தினங்களுக்கு முன்பு, அந்த மாநில டி.ஜி.பி. ரவி குப்தா மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் முன்பு ஹைதரபாத் அருகே உள்ள மொய்னாபாத்தில் இதற்கான சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. கழுகின் மேலே கேமரா பொருத்தப்பட்டு, கீழே நடப்பவை அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது.
உலகிலேயே இரண்டாவது முறை:
இந்த கழுகுகளை வி.வி.ஐ.பி. வருகை, அவர்களின் பொதுமக்கள் கூட்டம் ஆகியவற்றிற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். நாட்டிலே முதன்முறையாக கழுகு படைப்பிரிவு வைத்துள்ள ஒரே மாநிலம் தெலங்கானா மட்டுமே ஆகும். உலகிலே கழுகுகளை கண்காணிப்பிற்காக பயன்படுத்தும் இரண்டாவது நாடு என்ற பெருமையை இந்தியா இதன்மூலம் அடைந்துள்ளது. இதற்கு முன்பு, நெதர்லாந்து நாட்டில் கழுகுகள் பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
2020ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு, இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பிறந்த 3 மாதங்கள் முதல் இந்த கழுகுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், கழுகுகள் ட்ரோன்களை கீழே இழுத்து கொண்டு வரப்படும்போது சேதம் அடையாமல் அதை கீழே இறக்குவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா போலீசார் கழுகுகளை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதற்கு பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: பாதியில் நிறுத்தப்பட்ட திருப்பணிகள்; சிதிலமடைந்த நாகநாத சுவாமி கோயில் - சீரமைக்க கோரும் பக்தர்கள்
மேலும் படிக்க: Crime: வேறு ஒருவருடன் நிச்சயம் செய்த காதலி: கையை துண்டாக வெட்டிய காதலன்: நடந்தது என்ன?