தலைநகர் டெல்லியில் ஷஹ்தராவில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய 4 மாடி கொண்டது இந்த குடியிருப்பு. இதில் பலரும் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கார் பார்க்கிங் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.






கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி கட்டடம் முழுவதும் பரவியது. இதனால் குடியிருப்பில் இருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். ஆனால் இந்த சம்பவத்தில் துரதிஷ்டவசமாக 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனோஜ் (வயது 30), சுமன் (வயது 28), 5 வயது மற்றும் 3 வயது குழந்தை என 4 பேர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர்.


விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பு குறுகிய தெருவில் அமைந்துள்ளதாள் தீயணைப்பு வாகனம் கொண்டு செல்ல கடும் சவாலாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






இருப்பினும் கடும் சவால்களுக்கு மத்தியில் தீயணைப்பு வாகனம் கொண்டு சென்ற பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்தனர். - இதுகுறித்து டிசிபி ஷஹ்தரா சுரேந்திர சவுத்ரி கூறுகையில், "அதிகாலை 5:30 மணியளவில் கீதா காலனி காவல் நிலையத்தில் ஒரு வீட்டில் பெரும் தீ விபத்து குறித்து தொலைப்பேசி வாயிலாக தகவல் கிடைத்தது. அதன்படி, உள்ளூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ் மற்றும் பிசிஆர் வேன்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.