கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்தவர் லாலு பிரசாத் யாதவ்.


இவரின் ஆட்சி காலத்தில் ரயில்வே துறையில் குரூப் டி பிரிவில் ஏராளமானோர் பணி நியமனம் செய்யப்பட்டனர். அப்போது, லாலுவின் குடும்பத்தினர், ரயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக பலரிடம் நிலத்தை அன்பளிப்பாகவும் குறைந்த விலையிலும் பெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. 


இந்த ஊழல் வழக்கில் லாலு யாதவின் இளைய மகனும் தற்போது பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவும் சிக்கியுள்ளார். இது தொடர்பாக சிபிஐ கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தொடர்ந்து, ஜூலை மாதம் லாலுவுக்கு நெருக்கமானவராக கருதப்படும் போலா யாதவை கைது செய்தனர். 


நில மோசடியில் லாலு குடும்பம் சிக்கியது எப்படி? 


கிட்டத்தட்ட இந்த விவகாரம் 14 ஆண்டுகளுக்கு பழமையானது. கடந்த 2022ஆம் ஆண்டு மே 18ம் தேதிதான் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. முதலில் ரயில்வேயின் குரூப் டி பிரிவில் மக்கள் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டனர். நில ஒப்பந்தம் செய்யப்பட்டவுடன், அனைவருக்கும் முறையாக  நிரந்தரமான வேலை வழங்கப்பட்டது.


இதன்மூலம், பாட்னாவில் 1.05 லட்சம் சதுர அடி நிலத்தை லாலு குடும்பத்தினர் ஆக்கிரமித்ததாகவும், இந்த நிலத்தை மலிவு விலைக்கு விற்று, பணமாக்க பேரம் பேசியதாகவும் சிபிஐ தரப்பு குற்றம்சாட்டி வருகிறது.


சிக்கலில் லாலு குடும்பம்:


இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, தேஜஸ்வி யாதவின் டெல்லி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தியுள்ளனர். கடந்த திங்கள்கிழமை, லாலுவின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான ராப்ரி தேவி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். லாலுவிடமும் ராப்ரி தேவியிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். லாலு யாதவின் மகள்கள் ராகினி யாதவ், சந்தா யாதவ் மற்றும் ஹேமா யாதவ் மற்றும் முன்னாள் ஆர்ஜேடி எம்எல்ஏ அபு டோஜானா ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.


இதை கடுமையாக சாடியுள்ள லாலுவின் மற்றோர் மகள் ரோகிணி ஆச்சார்யா, "பாசிஸ்டுகள் மற்றும் கலவரக்காரர்கள் முன் எங்கள் குடும்பம்  வளைந்து கொடுக்காததால்தான் காலையிலிருந்து சித்திரவதை செய்யப்பட்டது.


இந்த அநியாயத்தை மறந்து விடக் கூடாது. அனைத்தும் நியாபகம் வைத்து கொள்ளப்படும். அக்காவின் சின்னப் பிள்ளைகள் என்ன குற்றம் செய்தார்கள்? கர்ப்பிணி அண்ணி என்ன குற்றம் செய்தார்கள்? ஏன் எல்லாரையும் துன்புறுத்துகிறார்கள்? இன்று காலையிலிருந்து எல்லாரையும் துன்புறுத்துகிறார்கள். 


லாலு-ராப்ரி குடும்பம் பாசிஸ்டுகளுக்கும், கலவரக்காரர்களுக்கும் முன்னால் தலைவணங்கவில்லை.இந்த அநீதிக்கு உரிய நேரம் வரும்போது பதில் கிடைக்கும்.இப்போது இதெல்லாம் சகிப்புத்தன்மைக்கு அப்பாற்பட்டது" என பதிவிட்டுள்ளார்.