இஸ்ரேல் பிரதிநிதி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க சென்ற நிலையில், காசா மீது கொடூர தாக்குதலை அரங்கேற்றி, 60 பேரை பலிகொண்டுள்ளது இஸ்ரேல். அங்கு என்னதான் நடக்கிறது.? பார்க்கலாம்.

Continues below advertisement

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 60 பேர் பலி

காசாவின் முக்கிய பகுதிகளில் நேற்று மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியது இஸ்ரேல். குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் இருக்கும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 60 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால், பூகம்பம் வந்ததுபோல் உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று போர் நிறுத்தம் ஏற்படும் சூழல் உள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வந்தாலும், நிஜத்தில், குண்டுவெடிப்புகள் காதில் ஒலித்துக்கொண்டே இருப்பதாகவும், மரணங்களையே தாங்கள் காண்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

Continues below advertisement

தாக்குதல் நடக்கும் நேரத்தில் அமெரிக்காவிற்கு பறந்துகொண்டிருந்த இஸ்ரேல் பிரதிநிதி

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய அதே நேரத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நம்பிக்கைக்குரிய மூலோபாய விவகாரத்துறை அமைச்சர் ரான் டெர்மர், ஈரான் மற்றும் காசா தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா பறந்து சென்றுகொண்டிருந்தார்.

ஏற்கனவே, காசாவுடன் பேச்சுவாத்தை நடத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறும், பிணைக் கைதிகளை மீட்குமாறும் ட்ரம்ப் அறிவுறுத்திய நிலையிலேயே ரான் டெர்மரை பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டனுக்கு அனுப்பியுள்ளார் நெதன்யாகு. 

ஆனால், அதற்கு இந்தப் பக்கம் ஒரு தாக்குதலை நடத்தி, 60 பேரின் உயிரை காவு வாங்கியுள்ளார் நெதன்யாகு. இதனிடையே, இன்று அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாக பிரதிநிதிகள் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கிறது.

காசாவிற்கு முன்னெச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

காசா மீதான தாக்குதலுக்கு முன்பே, வடக்கு காசா பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, காசாவின் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களில் டாங்குகள் மூலமும், வடக்கு பகுதியில் உள்ள நகரங்களில் வான்வழித் தாக்குதல்களையும் அரங்கேற்றியுள்ளது இஸ்ரேல்.

அங்குள்ள 4 பள்ளிகளில் தஞ்சமடைந்திருந்த மக்களை வெளியேறுமாறு கூறி, தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை நடைபெற்ற தாக்குதலில் மட்டும் 58 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறையால் தெரிவிக்கப்படுகிறது. செய்டோன் நகரில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், தென்மேற்கு பகுதியில் உள்ள நகரில் 13 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காசா நகரில் உள்ள கடற்கரை ஹோட்டல் ஒன்றில், பெண்கள், குழந்தைகள், ஒரு பத்திரிகையாளர் உள்பட 22 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 2023-ல் அக்டோபரில் போர் தெடங்கியது முதல், இதுவரை 220 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இஸ்ரேல் தரப்போ, வடக்கு காசா பகுதிகளில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீதே தாக்குதல் நடத்தியதாகவும், பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படாத வண்ணமே தாங்கள் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறுகிறது.

அமெரிக்கா செல்லும் நெதன்யாகு.?

இன்று வாஷிங்டனில் நடைபெறும் காசா தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையின்போது, வரும் வாரங்களில் வெள்ளை மாளிகைக்கு நெதன்யாகு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ரான் டெர்மர் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் தாக்குதல் நடத்துவது என்பது, இஸ்ரேலின் கள்ள ஆட்டமாகவே கருதப்படுகிறது. இதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக உள்ளது.