அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவிற்கு, எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மஸ்க்கின் நிறுவனங்களுக்கான மானியங்களை ரத்து செய்துவிட்டால், அவர் கடையை காலி செய்துவிட்டு, தென் ஆப்பிரிக்காவிற்கே திரும்ப வேண்டியிருக்கும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

மஸ்க் குறித்து ட்ரம்ப் கூறியது என்ன.?

ட்ரம்ப் கொண்டுவந்த வரி மற்றும் செலவு மசோதா, அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த எலான் மஸ்க், புதிய கட்சியை தொடங்குவது குறித்து தனது சமூக வலைதள பக்கம் மூலமாக மக்களிடம் கருத்து கேட்டார் கேட்டார்.

அதோடு, இந்த மசோதாவை தொடர்ந்து எதிர்த்து வருகிறார் மஸ்க். இந்த நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் தன்னை தீவிரமாக ஆதரித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், மின்சார வாகனங்களுக்கான நுகர்வோர் வரிச் சலுகையை ரத்து செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக தான் கூறி வருவதாகவும், அது எலான் மஸ்க்கிற்கும் நன்றாகவே தெரியும் என கூறியுள்ளார்.

“மஸ்க் தென் ஆப்பிரிக்காவிற்கே திரும்ப வேண்டியிருக்கும்“

மேலும், வரலாற்றிலேயே, எந்த மனிதரையும் விட அதிக சலுகைகளை அனுபவிப்பது எலான் மஸ்க் தான் என்றும், சலுகைகள் மட்டும் இல்லையென்றால், மஸ்க் தன் கடையை காலி செய்துவிட்டு தென் ஆப்பிரிக்காவிற்கே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும் என எச்சரிப்பது போல் பதிவிட்டுள்ளார்.

பல நாட்களாக வார்த்தைப் போர் நடத்திவந்த ட்ரம்ப்-மஸ்க்

மஸ்க்கின் உதவியுடன் அமெரிக்க அதிபரான ட்ரம்ப், அரசு செயல்திறன் துறை(DOGE) என்ற ஒன்றை உருவாக்கி, அதற்கு தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார்.

அதன் பின் அதிரடியாக செயல்பட்ட மஸ்க், பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதற்கு ஒருபுறம் பலத்த எதிர்ப்புகள் எழுந்தது ஒருபுறமிருக்க, அரசின் மீதே அதிக கவனம் செலுத்தியதால், மஸ்க்கின் நிறுவனங்கள் சிக்கலை சந்தித்தன. அவரது டெஸ்லா நிறுவனம் சரிவை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, தனது கவனத்தை தனது நிறுவனங்கள் மீது திருப்பப் போவதாக மஸ்க் அறிவித்ததையடுத்து, இருவருக்கும் இடையே சிறிய மனவருத்தம் ஏற்பட்டது. இந்நிலையில், அரசு செயல்திறன் துறையிலிருந்து விலகினார் எலான் மஸ்க்.

அதைத் தொடர்ந்து, மஸ்க் - ட்ரம்ப் இடையேயான மோதல் அதிகரித்து, சமூக வலைதளத்தில் மாறி மாறி பதிவுகளை போட்டு வந்தனர். எப்ஸ்டீன் கோப்புகளில் ட்ரம்ப்பின் பெயர் உள்ளது என மஸ்க் ஒரு பதிவை போட்டார்.

அதைத் தொடர்ந்து மோதல் பெரிதாகி, கோபமடைந்த ட்ரம்ப், மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கான அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்துவிடுவேன் என மிரட்டினார். இப்படிப்பட்ட சூழலில், திடீரென ட்ரம்ப் எப்ஸ்டீன் ஆவணங்களில் உள்ளதாக தான் போட்ட பதிவை சமீபத்தில் நீக்கினார் எலான் மஸ்க். அதைத் தொடர்ந்து, ட்ரம்ப் குறித்த மொத்த பதிவுகளையும் நீக்கிய மஸ்க், அது போன்று பதிவிட்டதற்கு ட்ரம்பிடம் வருத்தமும் தெரிவித்து பதிவிட்டார்.

ஆனாலும், ட்ரம்ப்பின் மசோதாவை அவர் தொடர்ந்து எதிர்த்தே வந்தார். இந்த நிலையில் தான், ட்ரம்ப் தற்போது இப்படி ஒரு எச்சரிக்கை பதிவை போட்டுள்ளார்.