தமிழகம் மற்றும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
*சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 70 படுக்கை வசதிகொண்ட கொரோனா சித்தா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
*தென்னிந்திய நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
*தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 298 பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 29,272 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,62,181 ஆக அதிகரித்துள்ளது.
*கொரோனா பேரிடரிலிருந்து தமிழ்நாடு மீண்டுவர மக்கள் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையில், “கொரோனாவுக்கு எதிரான போரில் வென்றிட அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாம் அனைவரும் ஒன்று கூடி இப்போரை வெல்வதற்கான நேரம் இது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கிறேன். பேரிடர் காலத்தில் அளிக்கப்படும் நிதி கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என நான் உறுதி அளிக்கிறேன். பெறப்படும் நன்கொடை - மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் அனைத்தும் வெளிப்படையாக பொதுவெளியில் வெளியிடப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
*தான் எழுதிய நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறைக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் தம்மை மகிழ்விப்பதாக எண்ணி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
"எந்த திட்டத்தின் கீழும் நான் எழுதிய புத்தகங்களை வாங்கக்கூடாது" - தலைமைச் செயலாளர் இறையன்பு
*தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
*தமிழகத்தில் கொரோனா பொது முடக்கத்திலிருந்து, அத்தியாவசியமான சில வணிகம் மற்றும் துறைகளுக்கு கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது.
*சர்வதேச சமூகத்திடம் இருந்து பெற்ற உதவிகளின் மூலம், இதுவரை 8,900 பிராணவாயு செறிவூட்டிகள், 5,043 பிராணவாயு சிலிண்டர்கள், 18 பிராணவாயு உற்பத்திக் கருவிகள், 5,698 செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் சுமார் 3.4 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை மத்திய அரசு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் விநியோகித்துள்ளது.