உத்தரப் பிரதேச மாநிலம் ருடாலி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கிராமம் ரஜான்பூர். இந்தக் கிராமத்தின் தலைவராக ஹபீஸ் அசிமுதீன் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுவாகவே பஞ்சாயத்து தேர்தல் அந்தந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமாகவே உள்ளது. இதன் முடிவுகளின் தாக்கம் அடுத்த சில வருடங்களில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இருக்கும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது. அதனாலேயே இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.,யின் பஞ்சாயத்துத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் இன்றளவும் உபியின் நகர்ப்புறக் கட்சியாகவே பாஜக கருதப்படுகிறது. கிராமப்புறங்களில் தனது எதிர்க்கட்சிகளான பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்டோரின் செல்வாக்கை வீழ்த்த பாஜக கடும் பிரயத்தனம் செய்தது.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நான்கு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. அந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் மே 4ம் தேதி நடைபெற்றன. உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 3,050 பஞ்சாயத்து வார்டுகளில், 790 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி. பாஜக 719 இடங்களையும், பகுஜன் சமாஜ் 381 இடங்களையும் கைப்பற்றியிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி 76 இடங்களிலும், சிறிய கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மற்றவர்கள் 1,114 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ருடாலி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ரஜான்பூர் கிராமத் தலைவர் தேர்தல் ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ரஜான்பூர் கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலில் 8 பேர் களம் கண்டனர். இவர்களில், ஒரே ஒருவர் மட்டுமே இஸ்லாமியர். ஒற்றை இஸ்லாமிய வேட்பாளராகக் களமிறங்கிய ஹபீஸ் அசிமுதீன் கான் தலைவராகவும் ஆகிவிட்டார். ஹபீஸின் குடும்பம்தான் ரஜான்பூர் கிராமத்தின் ஒரே இஸ்லாமியக் குடும்பம். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரக் களத்தில், சக வேட்பாளர்கள் பென்ஷன், பிரதமரின் வீட்டு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் பட்டா எனப் பற்பல கண்கவர் வாக்குறுதிகளை வழங்கினர்.
இருந்தாலும் ரஜான்பூர் கிராமத்தினர் எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டு ஹபீஸ் தான் தங்களின் தலைவர் என்பதில் உறுதியாக இருந்து வாக்களித்துள்ளனர். கிராமத் தலைவராகிவிட்ட அசிமுதீன், "அனைத்து நிதியும் கிராமத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே மடைமாற்றப்படும். கிராமத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஊர் மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்" எனக் கூறியிருக்கிறார்.
தங்களின் விருப்பம்போல் ஹபீஸ் கிராமத் தலைவராகிவிட்டது குறித்து கிராமத்தைச் சேர்ந்த பெண் ராதே ஷ்யாம் (53) கூறியபோது, அசிமுதீனின் வெற்றிக்கு இந்து முஸ்லிம் மத நல்லிணக்கத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. அசிமுதீன் வேட்பாளராக நிறுத்தப்பட்ட நாளே அவருக்குத் தான் எங்களின் வாக்கு என்பதை நாங்கள் உறுதி செய்துவிட்டோம் என்றார்.
சம்பத் லால் (61) கூறுகையில், "அசிமுதீனின் வெற்றி இங்கே எங்களின் கிராமத்தில் சாதி, மத சர்ச்சைகள் இல்லை என்பதற்கான சான்று. இங்கே வாக்கு கேட்டுவந்த இந்து வேட்பாளர்கள் அனைவரும் அவரவர் சாதியைச் சொல்லியே வாக்கு கேட்டனர். அசிமுதீனைத் தவிர வேறு யார் வெற்றி பெற்றிருந்தாலும் கசப்புணர்வே ஏற்பட்டிருக்கும்" என்றார். கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தலால், மாநில அரசு கிராமத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழாக்களை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.