TN Corona LIVE Updates: கொரோனா தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
TN Corona Cases LIVE Updates: கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவிப்பது தொடர்பான நெறிமுறைகளை மாநில அரசுகள் முழுமையாக பின்பற்ற வேண்டும்.
கோவிட்-19 தொடர்பாகவும், தடுப்பூசி திட்டம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று ஆலோசனை மேற்கொண்டார். மூன்றாவது கட்ட தடுப்பூசி திட்டத்தில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாளை தொடங்கவுள்ளது பற்றியும், தடுப்பூசி உற்பத்தி மற்றும் சீரான விநியோகம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களுக்கு 60 நிமிடங்களுக்குள் ஒப்புதல் வழங்கி சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,86, 452 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, 30 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,498 பேர் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொடுந்தொற்றை வெல்லமுடியும் என்று கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்தார்.
ஜோதிமணி தனது ட்விட்டரில்," தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்புகளைப் பற்றி அலசுவதற்கான நேரமல்ல இது. தமிழகத்திலும் எந்த நேரத்திலும் நிலைமை கைமீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை.அரசு,தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை முடிந்த அளவு கொவிட் வார்டுகளை உருவாக்கவேண்டும்.
மத்திய அரசு பாதி சுமையைக் கூட சுமக்க முன்வராத சூழலில் மாநில அரசின் தலையில் முழுச்சுமையும் உள்ளது. தமிழக அரசு மட்டுமே எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. வாய்ப்புள்ளவர்கள் உள்ளுர் அரசு மருத்துவமனைகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வரவேண்டும்
பெரும் எண்ணிக்கையிலான தன்னார்வலர்களுக்கான தேவை ஏற்பட வாய்ப்புள்ளது.நாம் எந்நேரமும் களமிறங்கத் தயாராக இருக்கவேண்டும். இத்துடன் தடுப்பூசி,முககவசம்,சமூக இடைவெளி அவசியம். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் இந்த கொடுந்தொற்றை வெல்லமுடியும். நம்பிக்கையுடன்,உறுதியுடன்,நிதானத்துடன் செயல்படுவோம்" என்று பதிவிட்டார்.
அமெரிக்காவிலிருந்து 600 ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவிகளும், அதுதொடர்பான பல்வேறு உபகரணங்களும் டெல்லி வந்தடைந்துள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
தமிழகத்தில் முகக்கவசம் அணியாத குற்றங்களுக்காக கடந்த 8ம் தேதியில் இருந்து 63,9837 வழக்குகள் பதியப்பட்டுள்ளன
https://www.esic.in/Dashboard/CovidDashBoard.aspx. என்ற இணையதள இணைப்பின் மூலம் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் உள்ள காலி படுக்கைகளின் நிலவரத்தை அறிந்துக் கொள்ளலாம் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்தது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 14 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் குழு, பல்வேறு மூலிகைகளிலிருந்து தயாரித்த ஆயுஷ்-64 என்ற மருந்து, அறிகுறிகள் அல்லாத, லேசான மற்றும் மிதமான கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையில் நல்ல பலன் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுயள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கோவிட்- 19 மேலாண்மைக்கான தேசிய பணிக் குழு, ஆயுர்வேதம் மற்றும் யோகாவின் அடிப்படையில் தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறைகளுள் இந்த மருந்தை பரிந்துரைத்துள்ளது.
லேசானது முதல் மிதமானது வரையிலான தொற்று உள்ள நோயாளிகளுக்கு ஆயுஷ் 64 மருந்தை வழங்கி அதன் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்ய, பலதரப்பட்ட மருத்துவ சோதனைகளை, ஆயுஷ் அமைச்சகம்- அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மன்றம் (சிஎஸ்ஐஆர்) ஆகியவை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்தன.
உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில், இந்தியாவில் மட்டும் தான் புதிய கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா , பிரான்ஸ் , ஈரான், பிரேசில் போன்ற நாடுகள் கொரோனா பாதிப்பு வளைவை தட்டையாக்கி ( Flatten the curve ) உள்ளன
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், போலந்தில் நடைபெறவுள்ள உலக தடகள ரிலே போட்டியில் இந்தியா பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி காலமானார். கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் , இன்று உயிரிழந்தார்.
Background
மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த கோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸ் விலையை 600 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக குறைக்க பாரத் பயோடெக் நிறுவனம் முன்வதுள்ளது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து இந்தியாவை மீட்க மேற்கொள்ளப்படும் நோய் தடுப்பு பணிகளில் உதவும் வகையில் இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், உற்பத்தியாளர்கள் தங்களது விநியோகத்தில் 50 சதவீதம் வரை மாநில அரசுகளுக்கும், வெளி சந்தைக்கும், முன்னரே நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்க தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் வழங்க இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து , மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு 400 ரூபாய் என்ற அளவிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என்ற அளவிலும் விற்பனை செய்யப்படும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்தது. பாரத் பயோடெக் நிறுவனம் மாநில அரசுகளுக்கு சப்ளை செய்யப்படும் ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி ரூ.600க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி ரூ.1,200க்கும் விற்கப்படும் என்று அது அறிவித்தது.
முன்னதாக, மாநிலங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி விலையில் 100 ரூபாய் குறைத்துக் கொள்வதாக சீரம் நிறுவனம் அறிவித்திருந்தது.
TN Corona Latest News LIVE Updates
கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவிப்பது தொடர்பான நெறிமுறைகளை மாநில அரசுகள் முழுமையாக பின்பற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
2021 ஏப்ரல் 25 தேதியன்று, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட நெறிமுறைகளில்," கடந்த ஏழு நாட்களில் கொரோனா உறுதி செய்யப்படும் விகிதம் (Positivity rate) 10 சதவிகிதத்திற்கும் அதிகமாகவும் (அ) 60 சதவீதத்திற்கும் மேலாக படுக்கை விகிதம் கொண்ட மாவட்டங்களை கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அடையாளம் காணப்படவேண்டும்" என்று மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை கேட்டுக் கொண்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -