பாஜக சேட்டைகள் செய்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார். 


எல்.ஐ.சி நிறுவனத்தின் வலைதளத்தை முழுமையாக இந்திக்கு மாற்றி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே இதுபோன்ற பல்வேறு சேட்டைகள் செய்து வருகிறது என்றும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். பாஜக திட்டமிட்டே இந்தியா முழுவதும் பிற மொழிகள் பேசும் மாநிலங்களை நசுக்கும் வகையில் இந்தி திணிப்பில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 


இதனிடையே தவெக கூட்டணி குறித்த கேள்விக்கும் திருமாவளவன் பதிலளித்திருந்தார். அப்போது தவெக நேரடியாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தால் ஆலோசனையாவது செய்வீர்களா என திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இது மிகவும் யூகமான கேள்வி. நாங்கள் ஏற்கெனவே சொல்லிவிட்டோம். இறுதியாக சொல்லிவிட்டோம். ஏற்கெனவே ஒரு கூட்டணியில் இருக்கிறோம். இனி கூட்டணி குறித்து யாரும் கேள்வி எழுப்ப வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்” எனத் தெரிவித்தார். 


மேலும், விஜய் வந்தபிறகு நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுகிறார்கள். அதிமுக கூட்டணி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். விஜய் எண்ட்ரிக்கு பிறகு அரசியலில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? அல்லது வெறும் பிம்பம்தானா?  அது பற்றி உங்கள் கருத்து என்ன என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். 


அதற்கு பதிலளித்த அவர், “இதுவும் யூகமான கேள்விதான். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆட்சிக்கு ஆசைப்படலாம். தவறல்ல. ஆனால் முடிவு எடுப்பவர்கள் மக்கள். அனைத்தையும் தீர்மானிக்கும் களம் தேர்தல். தேர்தல் வர ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. எனவே இப்போதே கேள்வி எழுப்புவது, பதிலை தேடுவது பொருத்தமற்ற ஒன்று” எனத் தெரிவித்தார்.