குரூப் 4 தேர்வர்கள் தங்களின் சான்றிதழை சரிபார்ப்புக்கு பதிவேற்றம் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ளன. அதாவது சான்றிதழை சரிபார்க்க நவம்பர் 21 கடைசித் தேதி என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்து உள்ளது.  


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத 20,37,101 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தன நிலையில், 20,36,774 பேர் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற்ற நிலையில், 4,45,345 பேர் தேர்வை எழுதவில்லை. தேர்வை 15,91,429 பேர் எழுதினர்.


அக்டோபரில் வெளியான தேர்வு முடிவுகள்


இவர்களுக்கான தேர்வு முடிவுகள் 92 வேலை நாட்களில் அதி விரைவாக வெளியிடப்பட்டன. அதாவது தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ஆம் தேதி அன்று வெளியாகின. அதே நாளில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் 559 உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரித்தது.


சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த முக்கியத் தகவல்கள்


தொடர்ந்து, தேர்வர்களின் பெயரில் தவறு, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட ஒதுக்கீடு கோருவோருக்கான சான்றிதழ்கள் பெறுவது எப்படி, தகுதியான அலுவலர்கள் யார், கணினி வழித் திரை சான்றிதழ் சரிபார்ப்பு, தமிழ் வழியில் கல்வி பயின்றோர் சான்றிதழ் என்பன உள்ளிட்ட விவரங்களை தினந்தோறும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது.


இதில் சந்தேகங்கள் ஏதேனும் ஏற்பட்டால், டிஎன்பிஎஸ்சி எக்ஸ் பக்கத்தில் உள்ள விளக்கங்களைக் கண்டு தெளியலாம்.






நவம்பர் 21 கடைசித் தேதி


இந்த நிலையில் குரூப் 4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கு நவம்பர் 21 கடைசித் தேதி ஆகும். தேர்வில் வெற்றி பெற்று, சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட தேர்வர்கள் அதற்குள் தங்களின் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.


இதனால் தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல், சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/